சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான நடராஜன் (66), நான்கு சக்கர தள்ளுவண்டியில் சென்று கொண்டிருந்த போது, இரயில்வே பாலத்தின் கீழ் வந்து கொண்டிருந்த போது, கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.
கோவை: கோவை சிவானந்தாகாலனி பகுதியில் திமுக கொடி பொருத்திய கார் மோதியதில் மாற்றுத்திறனாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவை சிவானந்தா காலனி அருகேயுள்ள கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (66). மாற்றுத்திறனாளியான இவர், நான்கு சக்கர தள்ளுவண்டியில் சென்ற இரயில்வே பாலத்தின் கீழ் வந்து கொண்டிருந்த போது, திமுக கட்சி கொடி பொருத்திய கார் ஒன்று அவர் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நடராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, அங்கு திரண்ட அவரது உறவினர்கள், விபத்தை ஏற்படுத்திய கட்சி (திமுக) கொடி கட்டியபடி வந்த பார்ட்சூனர் காரில் இருந்த ஓட்டுனர் குபேரசம்பத் என்பவரை அடித்து உதைத்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த ரத்தினபுரி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த கார் ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மனைவி உமாமகேஸ்வரி என்பவருக்கு சொந்தமானது என்பதும், சர்வீஸ் விடுவதற்காக ஓட்டுனர் காரை எடுத்து சென்ற போது விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்துள்ளது.

இதனிடையே, இது குறித்த தகவலறிந்து அங்கு வந்த கோவை வடக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து, காவல்துறையினர் ஓட்டுநரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும், காரையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.