கோவை வடவள்ளி பகுதியில் பாஜக சார்பில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக விழா நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து ஆதரவை திரட்டினார்.
கோவை: கோவை வடவள்ளி பகுதியில் பாஜக சார்பில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக விழா நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து ஆதரவை திரட்டினார்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "ஆங்கிலேயர் எப்போதுஇந்தியாவை விட்டு வெளியேறுவார்கள்என்று மக்கள் சிந்தித்ததை போல் திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள் காத்திருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோவையில் தடுப்பூசி கிடைப்பதை நிறுத்தி வைத்தனர். கோவை மாவட்டம் என்பது திமுகவிற்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை, அது மணக்காது", என்று விமர்சித்தார்.
கரூரிலிருந்து ஒரு டூரிஸ்ட் அமைச்சர் வந்துள்ளார் என அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சித்த அவர், கரூரில் இருந்து அவர் ஆதரவாளர்களை அழைத்து வந்து அரசியல் செய்கிறார். இதை கோவை மக்கள் ரசிக்க மாட்டார்கள், என்று தெரிவித்தார்.

அரவக்குறிச்சி மாடல் எலெக்சன் என்பதை போல், சுதந்திர இந்தியாவில் தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்த முதல் தேர்தல் அரவக்குறிச்சி தேர்தல் என்று குறிப்பிட்ட அவர், மக்களின் ஆதரவு எப்போதும் பாஜகவிற்கு இருக்கும், மக்களுக்கும் வாக்குபெட்டிக்கும் இணைப்பு பாலமாக பாஜக வேட்பாளர்கள் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நகர்புற தேர்தலில், பாஜக பலத்தை தெரிந்து கொள்ளவே தனித்து போட்டியிடுகிறது என்று கூறிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, இந்த தேர்தல் சமூக வலைதள தேர்தலாக மாறியுள்ளது. ஸ்மார்ட் வொர்க் மூலமாக மொபைல் பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் பிரச்சாரம் தொடர்பான காட்சிகள் மற்றும் படக்காட்சிகளை அதிகம் பகிர்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் எனவும் அவர் கட்சி வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிரச்சாரத்தை சுட்டிக்காட்டிய அவர், நேற்றிலிருந்து திமுக பொய் சொல்ல துவங்கிவிட்டதாகவும் பாஜகவை எதிர்த்து தான் அரசியல் செய்ய வேண்டும் என முதல்வர் முடிவு செய்து விட்டார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நீட் பாஜக திணித்தது என முதலமைச்சர் கூறுவதாகவும், ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின் காங்கிரஸ் காலத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ இடங்களை காட்டிலும் கடந்த 7 ஆண்டுகளில் இரட்டிப்பு மடங்கு கூடுதலாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நீட் மூலமாக இருளர் சமூகத்திலிருந்து மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளதாகவும், மதுரை மாணவிக்கு பாஜக மாவட்ட தலைவர் முழு கட்டணம் செலுத்துவதாக அறிவித்துள்ளதாகவும், கூறினார்.
நீட் தேர்வு காரணமாக அதிக கட்டணம் வசூலிக்க முடியாமல், தமிழகத்தில் அதிக மருத்துவ கல்லூரிகளை இயக்கி வரும் திமுகவினர் தான் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறிய அவர், திமுக எம்.பி காந்திசெல்வன், மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த போது தான் நீட் (காமன் எலிஜிபிளிட்டி டெஸ்ட்) தேர்வை கொண்டு வந்தார் என மீண்டும் குறிப்பிட்ட அவர், இதையெல்லாம் மறைத்துவிட்டு தமிழக அரசு நீட் டை வைத்து அரசியல் செய்கிறது. நீட் தேர்வு மக்களுக்கு எதிரானது அல்ல, என்றார்.
தமிழகத்தில் 833 மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருவது போன்ற மத்திய அரசின் திட்டங்களை,உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் பொதுமக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் எனவும் அவர் கூறினார். வேட்பு மனு பரிசீலனையின் போது, ஆளும்கட்சியின் தலையீடு அதிகம் இருந்ததாக கூறிய அவர், திமுக தோல்வி முகத்தை சந்திக்க துவங்கியதை இது உறுதிபடுத்துகிறது, என்று தெரிவித்தார்.
எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைவரது காலிலும் விழுந்து வாக்கு கேட்க வேண்டும் எனவும் சகோதர சகோதரிகள் போல் சென்று வாக்கு வாங்க வேண்டும் என்று பாஜக வேட்பாளர்களுக்கு அவர் அப்போது கூறினார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு பக்கம் திமுக தனது அதிகாரத்தை காட்டுகிறது, ஒருபக்கம் பாஜக மோடியின் சாதனைகளை சொல்லி வெற்றிபெற உழைக்கிறோம் என தெரிவித்தார். 2016ல் நீட் தேர்வு மசோதா குடியரசு தலைவர் வரை சென்று திரும்ப வந்துள்ளது. ஆனால், அதை நினைவில் கொள்ளாமல் திமுக கூட்டணி கட்சிகளை மட்டும் இணைத்து அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டு நீட் தேர்விற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

517 வாக்குறுதியில் 10 வாக்குறுதியை கூட திமுக நிறைவேற்றவில்லை. கோவையில் அடிப்படைவாத அமைப்புகள் பிரச்னை செய்வதாகவும் ஆனால் பாஜக வேட்பாளர்கள் எங்களது சாதனைகளை சொல்லி வாக்கு கேட்பார்கள் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தின் அனைத்து வீடுகளுக்கும் தாமரையை எடுத்து செல்வதே இலக்கு எனக் குறிப்பிட்ட அவர், கர்நாடகாவில் மதப்பிரச்னையை உருவாக்கியதே காங்கிரஸ் தான் எனவும் இந்து என்பது மதமே கிடையாது, அது ஒரு வாழ்வியல் முறை எனவும் மதம் என்ற வார்த்தையை பயன்படுத்துபவர்கள் புரிதல் இல்லாதவர்கள் எனவும் விமர்சித்தார்.
அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதை தமிழக அரசு எதிர்ப்பது முதல்வர் எதிர்கட்சி தலைவராக இருந்த போது எத்தனை முறை சிபிஐ விசாரணைக்கு கோரினார் என்பதை எண்ணிப்பாருங்கள் என தெரிவித்தார். இதில், திமுக கவுன்சிலர் மாசிலாமணி பாஜகவில் இணைந்தார்.
இந்நிகழ்வில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மூத்த நிர்வாகி கனசபாபதி, பாஜக கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
