424 பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்படும். தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இதுதவிர, இந்த வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் உள்பட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
கோவை: கோவை மாவட்டத்தில் 424 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: "கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மாநகராட்சியில் 1,290 வாக்குச்சாவடிகளும், 7 நகராட்சிகளில் 390 வாக்குச்சாவடிகளும், 33 பேரூராட்சிகளில் 632 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 2,312 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சம் 1,200 வாக்காளர்கள் இருப்பார்கள். இந்த வாக்குச்சாவடிகளில் மாநகராட்சியில் 169 வாக்குச்சாவடிகளும், 7 நகராட்சிகளில் 143 வாக்குச்சாவடிகளும், 33 பேரூராட்சிகளில் 112 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 424 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.
இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்படும். தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இதுதவிர, இந்த வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் உள்பட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
கோவை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக 2,312 கண்ட்ரோல் யூனிட், 2,312 பேலட் யூனிட் தயாராக உள்ளது. ஒரு பேலட் இயந்திரத்தில் 15 வேட்பாளர்களின் பெயர்களை சேர்க்க முடியும். எனவே, போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 15-ஐ தாண்டினால் கூடுதலாக ஒரு பேலட் இயந்திரம் இணைக்கப்படும்.
இதுதவிர, 10 சதவீத கன்ட்ரோல் யூனிட் மற்றும் 15 சதவீத பேலட் யூனிட் கூடுதலாக ஒதுக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும். இந்த தேர்தலில், 41 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 110 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 10 ஆயிரத்து 172 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுகின்றனர்.
இவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாள்வது குறித்து பயிற்சி விரைவில் அளிக்கப்பட உள்ளது. வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது", இவ்வாறு அவர் கூறினார்.