அனுமன் ஜெயந்தி விழாவை ஒட்டி ஸ்ரீ குபேர ஆஞ்சநேயருக்கு 2 டன் பழங்கள் மற்றும் 4000 கரும்புகள் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு செய்தனர். இதேபோல், ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்குத் தங்க, வைர நகைகள் கொண்டு ராஜா அலங்காரம் செய்து வழிபாடு செய்தனர்.
கோவை: அனுமன் ஜெயந்தி விழாவை ஒட்டி கோவை துடியலூர் ஸ்ரீ குபேர ஆஞ்சநேயருக்கு 2 டன் பழங்கள் மற்றும் 4000 கரும்புகள் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு செய்தனர்.
அதேபோல் கோவை தொப்பம்பட்டியில் உள்ள ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்குத் தங்க, வைர நகைகள் கொண்டு ராஜா அலங்காரம் செய்து வழிபாடு செய்தனர்.
இன்று நாடு முழுவதும் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்புப் பூஜை நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாகக் கோவை துடியலூர் அடுத்துள்ள விஸ்வநாதபுரம் ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர் சுற்றி 4 ஆயிரம் கரும்புகளால் தோட்டம் அமைத்தும் சுமார் 2 டன் அளவில் வாழைப்பழம், திராட்சை, சாத்துக்குடி, ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசிப்பழம், மாதுளம் பழம் உள்ளிட்ட 16 வகையான பழங்கள் வைத்து அலங்காரம் செய்து அபிஷேக அலங்கார பூஜைகள், மூலவர் சிறப்பு அலங்கார பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.
மேலும் பக்தர்கள் வெற்றிலை மாலை, துளசி மாலை, 1008 வடை மாலை சாத்தியும், லட்டு பிரசாதம் வைத்தும் வழிபாடு நடத்தினர். முன்னதாக கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்தும், கிருமிநாசினி மற்றும் முகக்கவசங்கள் வழங்கிய பின்னரே உள்ளே அனுமதித்தனர்.
விழாவில் தொடர்ந்து பஜனைகள், ராம நாம சுபகீர்த்தனங்கள், வாய்பாட்டுப் பக்தி இசை, பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயர் அருள்பெற்றுச் சென்றனர். தொடர்ந்து ஸ்ரீ அனுமன் துதி பம்பை இசையில் நடைபெற்றது.
பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் கோவை தொப்பம்பட்டி அடுத்துள்ள ஜெங்கமநாயக்கன்பாளையம் நவாம்ஸ அருள்மிகு ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோவிலில் 11ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆஞ்சநேயருக்குத் தங்க, வைர கவசத்தில், சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது.