தீ விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் வானை முட்டும் அளவுக்கு புகை வெளியேறியதால் பரபரப்பு நிலவுகிறது.
கோவை மாவட்டம், ராமநாதபுரம் அடுத்த ஸ்ரீபதி நகரில் மாட்டின் என்பவருக்குச் சொந்தமான கார் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் குடோன் ஒன்று இயங்கி வருகிறது.
இந்நிலையில், இன்று மதியம் திடீரென குடோனில் இருந்து தீ பற்றி மளமளவென குடோன் முழுவதும் பரவியது.
இதனால் வானை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறியது.
இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் காருக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக இருப்பதால் தீ கட்டுக்கடங்காமல் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக எரிந்து வருகிறது.
இந்த விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கார்கள் மற்றும் உதிரிபாகங்கள் சாம்பலாகின. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள ராமநாதபுரம் போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.