டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது முறையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாராபுரம் பெண்கள் மனு அளித்தனர்.
திருப்பூர்: டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது முறையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாராபுரம் பெண்கள் மனு அளித்தனர்.
தாராபுரம் வட்டம் பொட்டிகாம்பாளையம் பகுதியில், 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்போது அந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முக்கியமான சந்திப்பு என்பதால் அந்த வழியில் பள்ளிக் குழந்தைகள் முதல் வயதானவர் வரை கடந்து செல்கின்றனர். மேலும் அரசு நியாய விலை கடையும் அருகாமையில் உள்ளதால் உடனடியாக அந்த டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகளை நிறுத்தி விட வேண்டும் என்று 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதற்கு முன்பு இரண்டு முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது மூன்றாவது முறையாக மனு கொடுத்துள்ளோம். உடனடியாக மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர்.