இன்று சர்வதேச விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் தினம்.!!

விமானங்கள் பாதுகாப்பாக ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்றடைவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏ.டி.சி எனப்படும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக அக்டோபர் 20-ம் தேதி உலக வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் தினம் கொண்டாடப்படுகிறது.



கோவை: விமானங்கள் பாதுகாப்பாக ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்றடைவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏ.டி.சி எனப்படும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக அக்டோபர் 20-ம் தேதி உலக வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

மனிதன் 'சக்கரம்' கண்டு பிடித்த காலம் தொடங்கி, பயணம் என்பது மனிதவாழ்வின் பரிணாம வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்துள்ளது. அனைவரும் அறிந்ததே, முன்னொரு காலத்தில் மனிதன் காலால் நடந்து பெயர்ந்தது தொடங்கிப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட புறநானூற்றின் "வலவன் ஏவா வானூர்தி" எனும் கூற்றுக்கிணங்க ஆளில்லா தானியங்கி விமானங்களின் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

ஆரம்பக் காலங்களில் வான் வழி பயணம் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே என்ற நிலைமாறி இன்று சாமானிய மக்களும் தாம் விரும்பிய இடங்களுக்கு சில மணி நேரத்தில் சென்றடையக்கூடிய அளவிற்குக் கடந்த சில ஆண்டுகளில் முன்னேறியுள்ளது. நாள்தோறும் இன்று இலட்சக்கணக்கானோர் விமானச் சேவையைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இது எவ்வாறு சாத்தியமாகின்றது என்று நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.

வான் போக்குவரத்து என்பது மற்ற அனைத்து விதமான போக்குவரத்து முறைகளைக் காட்டிலும் சற்றே வேறுபட்டதாகும்.

உதாரணமாக, வாகனங்களையோ, இரயில்களையோ அல்லது கப்பல்களையோ நெரிசல் ஏற்படும் நேரங்களில் ஒரு இடத்தில் நிறுத்தி வைக்க இயலும். ஆனால் விமானத்தைப் பொறுத்தவரையில் இது சாத்தியமில்லாத ஒன்று. விமானம் பூமியின் புவியீர்ப்பு சக்தியை மீறிப் பறப்பதற்கு எரிபொருள் உதவியுடன் பறக்கின்றது, மேலும் பறப்பதற்குத் தேவையான எரிபொருளை எடுத்துச் செல்வதில் எடை, பயணதூரம், பயணிகளின் எண்ணிக்கை, சரக்குகளின் எடை என பல்வேறு வரம்புகள் உள்ளன. 

இதனால் ஓர் இடத்திலிருந்து புறப்படும் விமானமானது ஓர் குறிப்பிட்ட நேரத்திற்குள் பத்திரமாகத் தரையிறக்க வேண்டியது அவசியமாகிறது. 

மேலும் வானில் பறக்கும் விமானத்தின் வேகம் சராசரியாக நிமிடத்திற்கு 8 முதல் 12 கி.மீ வரை உள்ளதாலும், பரந்து விரிந்த வானில் ஒரு சேர பல விமானங்கள் பறக்கும் சூழ்நிலை உள்ளதாலும் வான் வழி போக்குவரத்து என்பது சற்றே சவாலானதாகும். 

விமானத்தில் பயணம் செய்யும் அனைவரும் விமானியைத் தான் முழுமையாக நம்பி உள்ளனர். இத்தகைய சவால்கள் நிறைந்த சூழலில் விமானிகள் நம்புவது ஏர்டிராபிக்கண்ட்ரோலர் (ஏ.டி.சி) எனப்படும் வான் போக்குவரத்துக்கு கட்டுப்பாட்டாளர்களை தான். உலகின் அனைத்து விமான நிலையங்களிலும் வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவு கட்டாயம் இருக்கும். இங்கு அமர்ந்து கொண்டு தான் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானநிலையங்களிலும், வானத்திலும் விமானிகளுக்கு வழிகாட்டி வருகின்றனர். 

கட்டுப்பாட்டு அதிகாரிகளின் முதன்மை குறிக்கோள் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமல் காப்பதாகும். மேலும் விமானங்கள் குறித்த நேரத்தில் பயண இலக்கை அடைவதிலும், போக்குவரத்து சீராவதிலும், இடர்பாடுகள் அல்லது பாதகமான சூழ்நிலைகளிலிருந்து மீட்பதிலும், தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளிலும் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் பணியானது அளப்பெரியது.

விமானத்தை எப்பொழுது இயக்கவேண்டும்? எப்பொழுது தரையிறக்கவேண்டும்? எப்பொழுது ஓடுதளத்தைப் பயன்படுத்தவேண்டும்? எந்தவேகத்தில்விமானத்தைஇயக்கவேண்டும்? எவ்வளவு உயரத்தில் பறக்கவேண்டும்? என்பவை போன்ற பாதுகாப்பு குறித்த அனைத்து செயல்பாடுகளுக்கும் விமானியானவர் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரியின் அனுமதி பெற்ற பின்னரே இயக்க முடியும் என்பது விதி. இதற்காக "ரேடார்"போன்ற பல தொழில்நுட்பக் கருவிகளின் துணை கொண்டு கட்டுப்பாட்டு அதிகாரிகள் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றனர்.

வகைகள்:







தரைக் கட்டுப்பாடு, டவர் கட்டுப்பாடு, புறப்பாடு கட்டுப்பாடு, ஏரியா கட்டுப்பாடு என நான்கு பிரிவுகளின் கீழ்கட்டுப்பாட்டு அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். விமானியும் கட்டுப்பாட்டாளரும் ரேடியோ அலை வரிசையில் தொடர்பிலிருந்து கொண்டே இருப்பர். விமானி விமானத்தை இயக்குவதற்கு முத்தரைக் கட்டுப்பாட்டு அதிகாரியிடம் அனுமதி கோருவார் இவர் விமானம் புறப்படும் போது எந்தவொரு பொருளோ வாகனமோ மோதாவாறு ஓடுதளத்தைப் பாதுகாப்பாகச் சென்றடைவதை உறுதிசெய்கிறார். 

பின்னர் விமானியுடனான தொடர்புடவர் கட்டுப்பாட்டு அதிகாரியிடம் மாற்றப்படுகிறது இவர் ஓடுதளம் பறப்பதற்கு ஏதுவாக உள்ளதா என சோதித்து விமானியை வழி நடத்துவார் பின் விமானியுடனான தொடர்பு புறப்பாடு கட்டுப்பாட்டு அதிகாரியிடம் மாற்றப்படுகிறது. இவர் விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களை வருகை தரும் விமானங்களிடம் இருந்து பத்திரமாகப் பிரித்து அந்தந்த இலக்க நிலையங்களுக்கு ஏற்ப வான் வழி தடங்களில் அனுப்பிவைப்பார். 



பின்னர் விமானியுடனான தொடர்பு ஏரியா கட்டுப்பாட்டு அதிகாரியிடம் மாற்றப்படுகிறது. இதன் பின் விமானி அந்தந்த இலக்க விமான நிலையங்களுக்கு வழி நடத்தப்படுகிறார். பின்னர் மேற்கூறிய முறைப்படி பாதுகாப்பாகத் தரை இறங்கவழி நடத்தப்படுகிறார்.



வான் போக்குவரத்து கட்டுப்பாடு என்பது தவறுகளுக்கு இடம் கொடுக்க முடியாத மிகவும் பொறுப்பான பணி. விதிகளைச் சரியாக புரிந்துணர்ந்து சூழ்நிலை மற்றும் வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப விமானிகளை வழி நடத்த வேண்டிய கடமை ஒவ்வொரு கட்டுப்பாட்டு அதிகாரிக்கும் உள்ளது. பல குழப்பமான மற்றும் சிக்கலான சூழ்நிலைகளில் சரியான முடிவினை சரியான நேரத்தில் எடுப்பவர்களே வான் போக்குவரத்து அதிகாரிகள்.

இத்துறையில் பணிபுரிவதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் நடத்தி வரும் எழுத்துத் தேர்வில் தகுதி பெற வேண்டும். பி.எஸ்.சி (கணிதம், இயற்பியல்) மற்றும் பொறியியல் பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் இந்த பணியைப் பற்றிய விழிப்புணர்வு இளைஞர்களிடம் மிகவும் குறைவாக இருப்பதால் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திலிருந்து 5% கும் குறைவான நபர்களே அதிகாரிகளாகத் தேர்வாகி பணிபுரிந்து வருகின்றனர் என்பது வேதனையான ஒன்று.



கோவை பன்னாட்டு விமான நிலையத்தின் இயக்குனர் செந்தில் வலவன் ஒரு வான் போக்குவரத்து அதிகாரியாகத் தனது சேவையைத் தொடங்கியவராவார். இவர் நாட்டின் பல முன்னணி விமான நிலையங்களில் கட்டுப்பாட்டு அதிகாரியாகவும் பின்னர் பயிற்சியாளராகவும் பணி புரிந்துள்ளார். தனது பதவிக் காலத்தில் பல இளம் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை சர்வதேச வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் தினத்தை முன்னிட்டு பயணிகளிடம் இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்பதும் விதமாக பல்வேறு எண் முறை பதாகைகள் மூலமும், நிகழ்ச்சிகள் மூலமும் கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...