கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த திருட்டுச் சம்பவத்தில் 47 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் நடந்த திருட்டு சம்பவங்களில் 47 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மதுக்கரை அடுத்த குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் அருள்ஜோதி (50). டிரைவரான இவர் நேற்று குடும்பத்தோடு வீட்டை பூட்டிவிட்டு கோவையில் உள்ள கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றார். மீண்டும் நேற்று இரவு வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் தங்க வளையல், இரண்டு பவுன் தங்க செயின் மற்றும் அரை பவுன் கம்மல் மற்றும் ஒரு பவுன் மோதிரம் ஆகியவை திருடப்பட்ட இருந்தது.
பின்னர், இது குறித்து அருள்ஜோதி மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று கைரேகைகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, கோவை ராமநாதபுரம் ஐயப்பன் கோவில் வீதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரின் மனைவி கௌரி மனோகரி (40). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் கோவை ராமநாதபுரத்தில் இருந்து காந்திபுரத்திற்குச் சென்று பிறகு காந்திபுரத்திலிருந்து கணபதிக்கு பேருந்து மூலம் சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில், கணபதி சி எம் எஸ் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த பொழுது கழுத்தில் அணிந்திருந்த பர்ஸில் வைத்து இருந்த இரண்டு சவரன் தங்கச் செயின் மற்றும் ஏடிஎம் கார்டு லைசென்ஸ் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது
இதனை தொடர்ந்து, கௌரிமனோகரி சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல, கோவை சுந்தராபுரம் அடுத்த மாச்சம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மனைவி கௌரி (72). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி வரலட்சுமி விரத பூஜை செய்துவிட்டு 30 சவரன் தங்க நகைகளை பீரோவில் வைத்துப் பூட்டி இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பீரோவை திறந்து பார்த்த பொழுது அங்கிருந்த 30 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பீரோவில் பல பகுதிகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
பின்னர், கௌரி இதுகுறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், கோவை செல்வபுரம் அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் வரதராஜன் (64). இவர் தனது மனைவி இளைய மகளுடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஊட்டிக்கு சென்றார்.
இந்நிலையில், நேற்று அவரது வீட்டின் அருகில் வசிக்கும் சுபா என்ற பெண் செல்போன் மூலம் அழைத்து வீட்டின் கதவு உடைந்து இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து, வரதராஜன் தனது மூத்த மகளுக்கு இது குறித்த தகவலை தெரிவித்தார். அவரது மூத்தமகள் அங்கு விரைந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
மேலும், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த நான்கு பவுன் வளையல்கள், ஒன்றரை பவுன் தாலிக்கொடி, 2 பவுன் செயின், மோதிரங்கள் மற்றும் 500 கிராம் வெள்ளி நகைகள் உட்பட நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஊட்டியில் இருந்து திரும்பி வந்த வரதராஜன் செல்வபுரம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைரேகைகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல, கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவரின் மனைவி சந்தானம்(50). இவர் நேற்று இரவு தனது மளிகை கடையில் அமர்ந்து வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தார்.
அப்போது பைக்கில் வந்த இரண்டு நபர்களில் ஒருவர் இறங்கி வந்து சந்தானத்திடம் முகவரி எங்குள்ளது என்று கேட்டுள்ளனர். பேசிக் கொண்டிருந்தபோது திடீரென சந்தானம் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க செயினை முகவரி கேட்பது போல வந்த நபர் பறித்துக்கொண்டு மற்றொருவர் ஓட்டி வந்த பைக்கில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அவர்களை துரத்திச் சென்று பிடிபத்தற்கு முன் அங்கே இருந்த மர்ம நபர்கள் தலைமறைவானார்கள்.
பின்னர், இதுகுறித்து சந்தானம் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.