இதனை தொடர்ந்து, புலி பிடிப்பட்ட இடத்திலிருந்து வனத்துறை மூலம் கூண்டில் புலி ஏற்றப்பட்டது. தற்பொழுது புலியை கொண்டுவரும் பணியில் ஒட்டுமொத்த வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 21 நாட்களாக ஒட்டுமொத்த வனத்துறைக்கு போக்கு காட்டி வந்த 23 ஆட்கொல்லி புலி சற்றுமுன் பிடிபட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள புலிகள் காப்பகங்களில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தும்போது அந்த புலிகளுக்கு எண்கள் கொடுக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள புலிகளில் ஒன்றுதான் 13 வயதுடைய இந்த T23 புலி.
இந்த புலி மசினக்குடியில் கெளரி என்ற பெண்ணை கடந்த ஆண்டு அடித்துக் கொன்றது. பின்னர் அப்பகுதியிலிருந்து கூடலூர் அருகே உள்ள தேவன் எஸ்டேட் பகுதிக்கு நகர்ந்த புலி கடந்த சில மாதங்களில் குஞ்சு கிருஷ்ணன், சந்திரன் ஆகிய இருவரையும் அடித்துக் கொன்றது.
இதை தவிர அப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்றது. இந்த புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து புலியை சுட்டுக்கொல்ல வனத்துறை முடிவெடுத்தது. அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தநிலையில் புலியை சுட்டுக்கொல்ல உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
அதனையடுத்து, அந்த புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க கடந்த 21 நாட்களாக வனத்துறையினர் தொடர்ந்து போராடி வந்தனர்.
கூடலூர் பகுதியிலும், மசனகுடி வனப்பகுதியிலும் இடம்மாறி புலி சென்றதால் ஒட்டுமொத்த வனத்துறைக்கும் புலியை பிடிப்பதில் பெரும் சவாலாக இருந்தது.
இதையடுத்து, கடந்த 2 நாட்களுக்கு முன் கூடலூர் தேவன் எஸ்டேட், நம்பிக்குன்னு பகுதியிலும் அதைத்தொடர்ந்து நேற்று இரவு மசனகுடி வனப்பகுதிக்கு T 23 புலி இடம்பெயர்ந்தது.
இதனை தொடர்ந்து, நேற்று இரவு இந்த புலிக்கு இரண்டு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அப்போதும் புலி வனத்துறைக்கு பிடிபடாமல் தப்பித்தது.
இந்த நிலையில், இன்று அதிகாலை முதுமலை செல்லும் வன சோதனை சாவடி அருகே காலை 10 மணி அளவில் சாலையை கடந்த புலியை வனத்துறையினர் கண்டனர். உடனடியாக புலியை பின்தொடர்ந்தனர்.
இதையடுத்து, சுமார் ஆறு மணிநேர தேடுதலுக்குப் பிறகு புலிக்கு மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

இதனை தொடர்ந்து, புலி பிடிப்பட்ட இடத்திலிருந்து வனத்துறை மூலம் கூண்டில் புலி ஏற்றப்பட்டது. தற்பொழுது புலியை கொண்டுவரும் பணியில் ஒட்டுமொத்த வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.