கோவையில் 550 டன் சமையல் எண்ணெய்களை உணவகங்கள் மூலம் பெற்று பயோ டீசலாக மாற்றும் உலக சாதனையை செய்ய விண்ணப்பித்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து கோவையில் 550 டன் ஆயிலை உணவகங்கள் மூலம் பெற்று பயோ டீசலாக மாற்றும் உலக சாதனையை செய்ய விண்ணப்பித்துள்ளனர்.
கோவை மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆகியவை சார்பில் உலக கைகள் கழுவும் தின விழா, உணவை வீணாக்காமல் பகிர்வோம் மற்றும் உபயோகித்த எண்ணெய் பயன்பாட்டு திட்டங்கள் துவக்க விழா கோவையில் உள்ள தனியார் கல்லூரி கலை அரங்கத்தில் இன்று நடைபெற்றது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்று கைகழுவுதலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கைகளை கழுவி செயல்முறை விளக்கம் அளித்தனர்.
அதனை தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு விரிவாக்க கட்டிடம் திறப்பு விழாவினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று துவக்கி வைத்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் ரூ.1.5 கோடி மதிப்பில் சிறப்பு குழந்தைகள் கவனிப்பு மையம் இன்று துவங்கப்பட்டுள்ளது.
ஒன்றை கிலோவிற்கும் எடை குறைவான குழந்தைகளுக்கும், பிறந்து 28 நாட்களுக்குள்ளாக வெவ்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகும் குழந்தைகள் இங்கு பராமரிக்கப்படுவார்கள்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில்;
கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. “சற்றேக் குறைப்போம்” என்ற திட்டத்தின் மூலம் மக்களுக்கு மருத்துவ உதவிகளும், “உபரி உணவு” திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் நடக்கும் அரசு, தனியார், சுபநிகழ்ச்சிகளில் மிஞ்சும் உணவுகளை தேவைப்படும் இடங்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியும், பணியில் உள்ள வாகனங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
"உபயோகித்த எண்ணை மறுபயன்பாடு" என்ற திட்டத்தின் மூலம் பெரிய உணவகங்களில் ஒரு முறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்களை பணம் கொடுத்து வாங்கி அதனை பயோ டீசலாக மாற்றும் பணி நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இந்த மூன்று திட்டங்களிலும் கோவை சிறப்பாக செயல்படுகிறது. பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 550 டன் சமையல் ஆயிலை, பயோ டீசலாக மாற்றி உலக சாதனை செய்து கின்னஸில் இடம் பிடித்துள்ளனர்.
அதே போல, கோவை மாவட்ட ஆட்சியர், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து கோவையில் 550 டன் ஆயிலை உணவகங்கள் மூலம் பெற்று பயோ டீசலாக மாற்றும் உலக சாதனையை செய்ய விண்ணப்பித்துள்ளனர்.
தடுப்பூசி செலுத்துவதில் கோவை தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது. 93 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும் 37 சதவீதத்தினர் 2ம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
மீதம் உள்ளவர்களுக்கு வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் வகையில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து மண்டலங்களுக்கும் தலா ஒரு வாகனம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
கோவையில் நடைபெற்ற 5 மெகா தடுப்பூசி முகாம் மூலம் 5.51 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கோவையில் கொரோனா குறைந்தாலும் பரிசோதனை செய்வதை குறைக்கவில்லை. கோவையில் தனியார் பங்களிப்பு நிதி மூலம் 7 ஆயிரத்து 121 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.
அம்மா கிளினிக் ஒரு குறுகிய காலத் திட்டம். அந்த திட்டம் முடிவடைந்து விட்டது. அம்மா கிளினிக்கில் பணியாற்றிய மருத்துவ பணியாளர்கள் தற்போது கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா, அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர்.