ஜவுளித்துறையினரை ஸ்தம்பிக்கச் செய்த வரலாறு காணாத பருத்தி விலையேற்றம் - விலையை ஸ்திரப்படுத்தும் CCI பருத்தி கையிருப்பு திட்டத்தை அறிவிக்கப் பாரத பிரதமருக்கு சைமா வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோவை: ஜவுளித்துறையினரை ஸ்தம்பிக்கச் செய்த வரலாறு காணாத பருத்தி விலையேற்றம் - விலையை ஸ்திரப்படுத்தும் CCI பருத்தி கையிருப்பு திட்டத்தை அறிவிக்கப் பாரத பிரதமருக்கு சைமா வேண்டுகோள் விடுத்துள்ளது.
நியாயமான விலையில் உள்நாட்டிலேயே கிடைக்கும் பருத்தி இந்திய ஜவுளித் தொழிலின் வளர்ச்சிக்கு அடிகோலியாக விளங்கி வருகிறது. இதன் காரணமாக ஜவுளித் தொழில் நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக 65 இலட்சம் விவசாயிகள் உள்பட 10.5 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக ஜவுளித் தொழில், பருத்தியின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது. பருத்தியை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திலிருந்து நீக்கிய பின்பு, பன்னாட்டுப் பருத்தி வியாபாரிகள் இந்தியப் பருத்தி பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்கள்.
இவர்கள் பருத்தி சீசனில். பெரும்பாலான இந்தியப் பருத்தியைக் கொள்முதல் செய்து, பருத்தியை ஏற்றுமதி செய்து, பருத்தி சீசன் அல்லாத காலத்தில் ஊக வணிகத்தில் ஈடுபட்டு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குகிறார்கள். இந்திய பருத்தி கழகம் பருத்தி சீசனில் குறைந்தபட்ச நிர்ணய விலையில் தான் கொள்முதல் செய்த பருத்திக்கு, மொத்த விற்பனைக்கு 120 நாட்கள் வரை வட்டியின்றி இருப்பு வைத்து கொள்ளும் வசதியோடு தள்ளுபடியையும் அளிப்பதால், பருத்தி விற்பனையாளர்களுக்கு ஊக வணிகத்தில் ஈடுபட வசதியாவதால் நிலைமை மேலும் சிக்கலாகுகிறது.
இதன் காரணமாகச் சிறு, நடுத்தர, குறு நூற்பாலைகள் ஏற்றுமதி ஆடர்களை நிறைவேற்றுவதில் சிக்கலை சந்திப்பதோடு மட்டுமன்றி, இழப்பையும் சந்திக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து நூல் விலை ஏறுவதால், ஆடை உற்பத்தியாளர்கள் நூல் விலையைக் குறைக்கக் கோரி அரசை நிர்ப்பந்திக்கிறார்கள். நூற்பாலைகளுக்கு இதர செலவினங்கள் கட்டுக்குள் இருக்கும் பொழுது, பருத்தி விலை மட்டும் அபரிமிதமாக உயர்வதால், நூல் விலையும் உயர்கிறது.
சிறு, நடுத்தர, குறு நூற்பாலைகள் அதிக வட்டி கொடுத்து (9 முதல் 12 சதவீதம் வரை) நிதி பெறுகின்றன. மேலும், 25 முதல் 30 சதவீதம் வரை மார்ஜின் தொகை தேவைப்படுகிறது. அவர்களால் நடப்பு மூலதனத்தை மூன்று மாதங்களுக்கு மட்டுமே பெற முடிகிறது. அதனால், விலை நிலைப்படுத்தல் நிதி திட்டத்தை அறிவித்து, ஐந்து சதவீத வட்டியில் மார்ஜின் தொகை வழங்க வேண்டும் அல்லது பருத்தி ஒரு விவசாய சந்தை பொருளாக இருப்பதால், நபார்டு வங்கி வட்டியில் நூற்பாலைகளுக்குக் கடன் அளிக்க வேண்டும்.
பருத்தி சீசன் காலத்தில் நடப்பு நிதி மூலதனத்தின் கால அளவை மூன்று மாதங்களிலிருந்து ஒன்பது மாதங்களாக அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் தொழில் 2 முதல் 3 சதவீதம் வரை அதிக வளர்ச்சி அடைந்து கூடுதல் வருவாயும், புதிய வேலை வாய்ப்பும், ஏற்றுமதி வளர்ச்சியும் ஏற்படும்.
இது குறித்து இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில், தென்னிந்தியப் பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவி சாம், பருத்தி விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை ஸ்திரப்படுத்தும் வண்ணம் விலை நிலைப்படுத்தல் நிதி திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று பாரத பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 11 பருத்தி சீசன்களில், வரலாறு காணாத வகையில் தற்போது பருத்தியின் விலை உச்சத்தை அடைந்துள்ளது. நியூயார்க் பருத்தி சந்தையில் பருத்தி பவுண்டு ஒன்றுக்கு 70 முதல் 80 செண்ட் என்று இருந்தது, தற்போது 110 செண்ட் ஆக உயர்ந்து பீதியையும், நிச்சயமற்றதன்மையைபயும் பருத்தி ஜவுளித் தொழிலில் ஏற்படுத்தியுள்ளது.
அவர் மேலும் கூறுகையில், கடந்த 15 நாட்களில், நியூயார்க் பருத்தி சந்தையில் விலை 25 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது என்று கூறினார். இந்தியாவில் பருத்தி கையிருப்பு போதிய அளவிலிருந்த போதிலும், சங்கர்-6 வகை பருத்தியின் விலை டிசம்பர் 2020ல் கண்டி ஒன்றுக்கு ரூ.41,900ல் இருந்து, தற்போது அக்டோபர் முதல் வாரத்தில் ரூ.57,000 ஆக உயர்ந்துள்ளது.
2021-22 பருத்தி சீசன் துவக்கத்தில் பருத்தி கையிருப்பு 100 இலட்சம் பேல்களாக இருந்தது, நடப்பாண்டில் 355 இலட்சம் பேல்கள் உற்பத்தி, 330 இலட்சம் பேல்கள் உள்நாட்டுத் தேவை, 10 இலட்சம் பேல்கள் இறக்குமதி என்று இருக்க வாய்ப்பிருப்பதால், 135 இலட்சம் பேல்கள் ஏற்றுமதி மற்றும் இருப்பு பருத்தி அளவாக மதிப்பிடப்படுகிறது.
உலக பருத்தி உற்பத்தியில் 10 சதவீதத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் சிங்ஜியான் மாகாண சீன பருத்திக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளதால், தற்போதைய சீசனிலேயே இந்திய பருத்தி ஏற்றுமதி 100 இலட்சம் பேல்களை தாண்டும் அபாயம் உள்ளது என்று சைமா தலைவர் தெரிவித்தார். இதனால், பருத்தி பற்றாக்குறை ஏற்படுவதுடன், ஊக வணிகத்திற்கும் இது இடமளிக்கும் என்று தனது கவலையைத் தெரிவித்தார்.
ஏற்கனவே, பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பருத்தி வியாபாரிகள், இறக்குமதி பஞ்சு மீது விதிக்கப்பட்ட 10 சதவீத வரியை பயன்படுத்தி, 2020-21 சீசனில் உற்பத்தியான இந்தியப் பருத்தியின் விற்பனையின் மூலம் அபரிமிதமான இலாபத்தை அடைந்துள்ளனர். இந்த ஆண்டு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியினால் பருத்தி விவசாயிகள் எந்த பலனையும் அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏனெனில், இந்தியப் பருத்தி தேவையில் 2 முதல் 3 சதவீதம் அளவிற்கே பருத்தி இறக்குமதி உள்ளது, அதுவும் குறிப்பாகக் கூடுதல் நீண்ட இழை பருத்தி, கரிம பருத்தி, உலகின் தலை சிறந்த பிராண்டுகளுக்கு விநியோகிக்கும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதிக்காக இறக்குமதி செய்யப்படுகிறது.
மேலும், அவர் கூறுகையில் நம் நாட்டில் உற்பத்தியாகும் DCH-32 வகை பருத்தியின் தரம் குறைவாக இருந்த போதிலும், அதன் விலை டிசம்பர் 2020ல் கண்டி ஒன்றுக்கு ரூ.57,500 என்று இருந்தது, 2021 அக்டோபர் முதல் வாரத்தில் ரூ.1.2 இலட்சம் விலையில் விற்கப்படுகிறது. இதனால், ஒட்டு மொத்த பருத்தி ஜவுளி சங்கிலியில் உள்ள நூற்பாலைகள், ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதியாளர்கள் ஒரு சமதள வாய்ப்பு இல்லாததால் பாதிக்கப்படுவர் என்று ரவி சாம் கூறினார்.
சைமா தலைவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளின் மாதாந்திர பருத்தி விலைகளை ஆய்வு செய்தால், மூன்றில் ஒரு பங்கு பருத்தியை மட்டுமே நூற்பாலைகள் சீசனில் வாங்குகின்றனர், அதே நேரத்தில் மூன்றில் இரு பங்கு பருத்தியைக் குறிப்பாகப் பன்னாட்டு வியாபாரிகள் வாங்குகின்றனர்.
பருத்தி வாங்குவதைத் தாமதப்படுத்தி நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் பருத்தி விலையை வீழ்ச்சியடையச் செய்கின்றனர். அதனால். பருத்தி விவசாயிகள் மிகுந்த இழப்பைச் சந்திக்கிறார்கள். ஜவுளித்துறையினர் பருத்தி பற்றாக்குறையைச் சமாளிக்க அடிக்கடி பருத்தியை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர் என்று குறிப்பிட்டார்.
நம் நாட்டில் உற்பத்தியாகும் பருத்தியில் 10 முதல் 15 சதவீதம் தரம் குறைந்தவையாக உள்ளன. எனவே ஏற்றுமதிக்குத் தரமான நூலை உற்பத்தி செய்ய இயலாததாதல், தரமான பருத்தியை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது என்று சைமா தலைவர் கூறினார். இந்நிலையில், பருத்தி மீதான 10 சதவீத இறக்குமதி வரி தற்போதைய பருத்தி சீசனில் ஏற்படுத்தும் தாக்கத்தைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் அரசு ஒரு கொள்கை முடிவு எடுக்காவிட்டால் நிலைமையை மேலும் சிக்கலாகும் என்று சைமா தலைவா தெரிவித்தார்.
நூற்பாலைகளுக்கு அதிக சலுகையும், முக்கியத்துவமும் கொடுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த சில வருடங்களாக இந்திய பருத்தி கழகம் பருத்தியைச் சிறு, நடுத்தர, குறு நூற்பாலைகளுக்குக் கூடுதல் சலுகைகளை வழங்கி வருவதால் அவர்கள் பயன் அடைந்துள்ளனர். தற்போது பருத்தியின் விலை அதிகமாக உள்ளதால், இந்திய பருத்தி கழகம் குறைந்தபட்ச விலை நிர்ணய திட்டத்தின் கீழ் பருத்தியை வாங்க முடியாது.
இதனால், பருத்தி வியாபாரிகள் சீசனில் மொத்த பருத்தியையும் தங்கள் வசம் வாங்கி வைத்து ஊக வணிகத்தில் ஈடுபடவும், தரமான பருத்தி அதிகளவில் ஏற்றுமதியாகி பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆகையினால், பருத்தி விலை உயர்வு காரணமாக ஜவுளித் தொழில் கடுமையான நெருக்கடியை நோக்கி செல்கிறது என்று சைமா தலைவா கூறினார்.
எனவே, விலையை ஸ்திரப்படுத்தும் பருத்தி கையிருப்பு திட்டத்தை இந்திய பருத்தி கழகத்திற்காக உருவாக்கி, அதற்கு மத்திய அரசு வேண்டிய நிதியைக் குறைந்த வட்டியில் அளித்து பருத்தி சீசனில் உற்பத்தியாகும் 10 முதல் 15 சதவீத பருத்தியை வாங்கி இந்திய பருத்தி கழகம் இருப்பு வைத்துக் கொண்டு பருத்தி விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்தி, சீசன் அல்லாத காலத்தில் (மே-செப்டம்பர்) பருத்தியை நூற்பாலைகளுக்கும் மட்டும் விற்கும் வகையில் திட்டத்தை உருவாக்க சைமா தலைவர் பாரத பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளார்.