பழங்குடியின மக்களுக்கு 2006-சட்டத்தின் படி இடம் தரக்கோரி சிபிஎம் மலைவாழ் சங்கம், தொழிற்சங்கம், சமூக செயற்பாட்டாளர் உள்ளிட்ட கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு.
கோவை: பழங்குடியின மக்களுக்கு 2006 -சட்டத்தின் படி இடம் தரக்கோரி சிபிஎம் மலைவாழ் சங்கம், தொழிற்சங்கம், சமூக செயற்பாட்டாளர் உள்ளிட்ட கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ளது கல்லாறு குடி பழங்குடியின கிராமம். இந்த கிராமத்தில் 23-குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த, 2018-ஆம் ஆண்டு பெய்த கனமழைக்கு, இந்த செட்டில்மென்ட் பகுதியில், வீடுகள் அனைத்தும் மண்ணில் புதைந்தன.
இதனையடுத்து, பழங்குடியின மக்கள் 2006-வனச்சட்டப்படி தெப்பக்குளமோடு பகுதியில் வசிக்க இடம் தரக்கோரி பல்வேறு மனுக்கள் அளித்தும் போராட்டங்களையும் நடத்தினர். கடந்தாண்டு, செப்டம்பர் மாதம் பழங்குடியின மக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், வால்பாறை தாசில்தார் தலைமையில், 15 பேர் கொண்ட குழுவினர் தெப்பக்குளம் மேடு பகுதியில் நில அளவை செய்தனர்.
நில அளவை செய்து ஓராண்டாகியும் வீடு கட்ட இடம் வழங்காததால், கடந்த 5-நாட்களாக அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பழங்குடியின மக்களுக்கு 2006 -சட்டத்தின் படி இடம் தரக்கோரி சிபிஎம் மலைவாழ் சங்கம், தொழிற்சங்கம், சமூக செயற்பாட்டாளர் உள்ளிட்ட கூட்டமைப்பினர், ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.
இதனையடுத்து, வனச்சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்காமல், பழங்குடியின சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலம் வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்ததாகக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.