இந்தியாவில் கடந்த சீசனில் 355-லட்சம் பேல் பருத்தி உற்பத்தி; ரூபாய் 75-லட்சம் பேல் ஏற்றுமதி, 10 லட்சம் பேல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
இந்தியாவில் ஆண்டுதோறும் அக்டோபர் துவங்கி அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை பருத்தி சீசன் ஆகும். கடந்த மாதத்துடன் நிறைவடைந்த 2020-21 சீசனில் 355 லட்சம் பேல் பருத்தி( ஒரு பேல்= 170 கிலோ பருத்தி) உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
கோவை: இந்தியாவில் கடந்த ஆண்டு சீசனில் 355-லட்சம் பேல் பருத்தி (Cotton) உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், நடப்பாண்டிலும் அதே அளவு பருத்தி உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளதாக, தென்னிந்திய மில்கள் சங்கம் (SIMA) தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (SIMA) தலைவர், ரவி சாம் மற்றும் பொதுச் செயலாளர், செல்வராஜ், கூறியதாவது:-
பருத்தியை முக்கிய மூலப் பொருளாகக் கொண்டு செயல்படும் இந்திய ஜவுளி தொழில்துறை, நாட்டில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது. ஜவுளி தொழில் சார்ந்த சங்கிலித் தொடரில், நேரடியாகவும் மறைமுகமாகவும் 1.10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
பருத்தி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி
இந்தியாவில் ஆண்டுதோறும் அக்டோபர் துவங்கி அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை பருத்தி சீசன் ஆகும். கடந்த மாதத்துடன் நிறைவடைந்த 2020-21 சீசனில் 355 லட்சம் பேல் பருத்தி ( ஒரு பேல்= 170 கிலோ பருத்தி) உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம், 75 லட்சம் பேல் பருத்தி இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதே போல், வெளிநாடுகளிலிருந்து 10 லட்சம் பேல் பருத்தி இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கையிருப்பு (Closing Stock) 103 லட்சம் பேல் உள்ளது.
வரும் சீசன் எப்படி இருக்கும்?
நடப்பு ஆண்டுக்கான சீசன் இந்த மாதம், அதாவது அக்டோபர் 1 முதல் துவங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டும் 355 லட்சம் பேல் முதல் 360 லட்சம் பேல் பருத்தி இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது.
வரியால், வளர்ச்சி பாதிப்பு..!
பருத்தி இறக்குமதிக்கு இந்தியாவில் 10 சதவீத வரி விதிக்கப்படுவது ஜவுளி தொழில் துறையை மிகவும் பாதிக்கிறது. பருத்தி ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் வரி விதிக்கக் கூடாது என்பது எங்கள் கருத்து. வரியை நீக்கினால், இந்திய ஜவுளி தொழில் துறை சிறப்பான வளர்ச்சி பெறும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.