பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு மீதான ஒரு சதவீத மார்க்கெட் செஸ் கட்டணத்தைத்தமிழக முதல்வர் சமீபத்தில் நீக்கி வெளியிட்ட வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பால் ஜவுளி தொழில்துறையினர் மிகுந்த பயன் பெறுவர்.
கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள சைமா வளாகத்தில் நடந்த புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட சைமா தலைவர் ரவிசாம் மற்றும் அகில இந்திய ஜவுளி கூட்டமைப்பு (CITI) தலைவர், ராஜ்குமார் ஆகியோர்செய்திளாயர்களை இன்று சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு மீதான ஒருசதவீத மார்க்கெட் செஸ் கட்டணத்தைத்தமிழக முதல்வர் சமீபத்தில் நீக்கி அறிவிப்பு வெளியிட்டது வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாக தெரிவித்தனர். மேலும், இந்த நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் உள்ள ஜவுளிதொழில் துறையினர் அனைவரும் மிகுந்த பயன் பெற வாய்ப்பு உள்ளது, என்றனர்.
மேலும், தமிழக முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த வாரம் இந்திய பருத்தி கழகம் (Cotton Corporation Of India) தமிழகத்தில் ஐந்து இடங்களில் பஞ்சு இருப்பு வைத்து மில்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. முதலாவதாக,கோவையில் பஞ்சு சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட உள்ளதாக கூறினர்.
இதன் மூலம், தமிழகத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரப் பிரிவைச் சேர்ந்த ஸ்பின்னிங் மில்கள், பெரிய மில்கள் என அனைத்து பிரிவை சேர்ந்த மில் நிர்வாகத்தினரும் தேவையான அளவு பஞ்சை தமிழகத்திலேயே வாங்கிக் கொள்ள முடியும் எனவும் பஞ்சு கொள்முதல் செய்வதற்கானத் தொகையை செலுத்துவதற்கு கால அவகாசமும் வழங்கப்படும். மேலும், தற்போது தமிழகத்தில் தயாரிக்கப்படும் ஜவுளி பொருட்கள் சாயம் ஏற்றுவதற்காக வடமாநிலங்களுக்கு கொண்டு சென்று மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது.
இதை தவிர்க்கும் வகையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் தமிழகத்தில் கடலூரில் கடற்கரையோரம் துணிகளுக்கு சாயம் ஏற்றி பதப்படுத்தும் பூங்கா அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில், துணிகளுக்கு சாயம் ஏற்றும் போது, அந்த நிறம் முற்றிலும் நீக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு, உப்பு தண்ணீர் மட்டுமே பல கிலோ மீட்டர் தள்ளி கடலில் கலக்கப்படும். அவ்வாறு, கலக்கப்படும் தண்ணீரில் உள்ள உப்புத்தன்மை கடலில் ஏற்கனவே உள்ள உப்புத் தன்மை விட மிக மிக குறைவானதாகவே இருக்கும். எனவே, இதுபோன்ற சிறப்பான ஒரு திட்டத்தை தமிழ்நாட்டில் விரைவில் செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அதுகுறித்து, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் கூறினர்.
மேலும், தமிழகத்தில் இது போன்ற பூங்கா செயல்படத் தொடங்கினால் பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் திருப்பூரை போல கடலூர் மாறும் என தெரிவித்த அவர்கள், இந்த சாய பதப்படுத்துதல் பூங்கா செயல்பாட்டுக்கு வந்தால் தமிழகத்தில் ஜவுளி
பொருட்களின் விலையும் கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதோடு,இந்திய ஜவுளி பொருட்களை ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உதவும் வகையில் Free Trade Agreements (FTA) செயல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். தற்போது, சில நாடுகளுடன் மட்டுமே இந்தஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இக்கோரிக்கை குறித்து விரைவில் மத்திய ஜவுளித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த முடிவு செய்துள்ளதாக சைமா தலைவர் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
மேலும், பருத்தி மீது விதிக்கப்பட்டுள்ள 10 சதவீத இறக்குமதி வரியைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் இவ்வாறு மேற்கொண்டால் மட்டுமே ஜவுளித் தொழில் துறையின் வளர்ச்சி இரு மடங்கு அதிகரிக்கும் என செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டது. மேலும், Inverted Duty என்பது தற்பொழுது ஜவுளி தொழில் துறை வளர்ச்சிக்கு பெரிய தடையாக உள்ளதால் பருத்தியை போல செயற்கை நூலிழை ஜவுளி
பொருட்களுக்கும் சீரான வரி விதிப்பு நிர்ணயிக்க வேண்டியது மிக அவசியம் என தெரிவித்தனர்.
சைமாவின் 62 வது பொதுக்குழு கூட்டம் முடிவுற்ற நிலையில் நடைபெற்ற முதல் செய்தியாளர் சந்திப்பில் சைமா தலைவர், சைமா துணைத்தலைவர் துரை பழனிச்சாமி மற்றும் பொதுச்செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.