கடந்த 2018-ஆம் ஆண்டு, போலியாக வரைபடம் தயாரித்து பூங்கா, பொதுக்கீடு இடம் 39-சென்ட்டை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.6-கோடி ஆகும். மாநகராட்சிக்குச் சொந்தமான இந்த இடம் மீட்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை விளாங்குறிச்சியில், மாநகராட்சிக்குச் சொந்தமான ரூ.6-கோடி மதிப்புள்ள இடம் மீட்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட விளாங்குறிச்சி, 32-ஆவது வார்டில் தனியார் சார்பில் லே-அவுட் அமைக்கப்பட்டு, அதில் உள்ள 33-மனைகளில் 12-மனைகள் நேரடியாக விற்பனை செய்யப்பட்டு, மீதமிருந்த 12-மனைகள் இடைத்தரகர்கள் மூலமாக பல்வேறு நபர்களுக்கு விற்கப்பட்டன.
விளாங்குறிச்சி ஊராட்சியாக இருந்த போது, இந்த லே-அவுட்டில் இருந்த பூங்கா மற்றும் பொதுக்கீடு இடங்கள் ஆவணங்களில் காண்பிக்கப்படவில்லை. கடந்த 2011-ஆண் ஆண்டு விளாங்குறிச்சி, மாநகராட்சியுடன், 32-ஆவது வார்டில் இணைக்கப்பட்ட பிறகும், மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகளால் பூங்கா, பொதுக்கீடு இடம் குறிப்பிடப்படாததைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு, போலியாக வரைபடம் தயாரித்து பூங்கா, திறவிடம் 39-சென்ட்டை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.6-கோடி ஆகும். மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, ஆக்கிரமிப்பு இடத்தை மீட்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை அடுத்து மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி ரவிசந்திரன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அந்த இடத்தை மீட்டுள்ளனர். தற்போது அந்த இடத்தில் இந்த இடம் மாநகராட்சிக்குச் சொந்தமான இடம் என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.