உள்ளாட்சித் தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் என்றும், கட்சி நிர்வாகிகள் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதற்காகத் தீவிரம் காட்டி வருவதாக, ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கோவை: வருகிற உள்ளாட்சித் தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போட்டியிடப்போவதாக, அக்கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கொரோனா காலத்தில் கோவை அரசு மருத்துவமனை சிறப்பாக இயங்கியது. தற்போதுள்ள டீன் தலைமையிலான மருத்துவர்கள் எத்தனை நோயாளிகள் வந்தாலும் தேவையான சிகிச்சைகள் அளித்துப் பல உயிர்களைக் காப்பாற்றி உள்ளனர்.
தமிழக அரசும் கொங்கு மண்டலமான கோவைக்கு அதிக கவனம் செலுத்தியது. முதலமைச்சரும் மற்ற மாவட்டங்களுக்கு ஆய்வுக்குச் சென்றதை விடக் கோவைக்கு வந்தது தான் அதிகம். மூன்றாவது அலை பற்றிய பயம் மக்கள் மத்தியில் உள்ளது.
மக்கள் பயப்பட வேண்டாம். இதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. எனவே மக்கள் பயப்படத் தேவையில்லை. தடுப்பூசி மையங்கள் மூலமாகத் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடந்து வருகிறது.
எனவே பொதுமக்கள் பயப்படாமல் அந்தந்த பகுதி முகாம்களுக்குச் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டு தங்களை காத்துக் கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் 2-ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது.
முதல் நாளில் தமிழகம் முழுவதும் நாற்பதாயிரம் முகாமும் நேற்று இருபதாயிரம் முகாமும் நடத்தப்பட்டது. முதல் நாள் நடைபெற்ற முகாமில் 29-லட்சம் பேரும் நேற்று நடைபெற்ற முகாமில் 16-லட்சம் பேரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நேரடியாகத் தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று கண்காணிப்பு பணியைத் தீவிரப்படுத்தி வருகிறார். நேற்று காலை பொள்ளாச்சியிலிருந்து புறப்பட்ட அவர் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி வழியாகச் சென்னைக்குச் சென்றார்.
அவர், ஒவ்வொரு மாவட்டத்திலும் 2-முகாம்களுக்காவது சென்று ஆய்வு செய்தார். வருகிற உள்ளாட்சித் தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும்.
எங்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதற்காகத் தீவிரம் காட்டி வருகின்றனர். எங்கள் மக்கள் அதிகமாக உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக திமுக மாவட்டச் செயலாளர்களுடன் எங்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.