காலதாமதத்திற்கு அரசு துறை அதிகாரிகள் தவறு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர் சம்பளத்திலிருந்து 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சேவை பெறும் உரிமை சட்டம்' என்பது அனைத்து குடிமக்களுக்கும் அரசு சேவைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் கிடைப்பதை ஒரு உரிமையாக அறிவிக்கப்படுவது ஆகும். அரசு அதிகாரிகள் குறித்த நேரத்தில் பணி செய்யவில்லை என்றால் அபராதம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறது.
கோவை: அனைத்து மக்களுக்கும் அரசு சேவையை நேர்மையான முறையில் காலதாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், தவறு செய்யும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், 'சேவை பெறும் உரிமை சட்டம்' அமல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதே சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கருத்தாகும்.
பலருக்கும், ஏன் சேவை பெறும் உரிமை சட்டம் காலத்தின் கட்டாயம் என்பது குறித்து விழிப்புணர்வு இல்லை. இச்சட்டத்தின் மூலம் ஒரு மக்கள் எவ்வாறு பயன்பெற முடியும் என்பதை குறித்து நம்மிடம் பேசிய
'அறப்போர் இயக்கத்தின்' ஒருங்கிணைப்பாளர், ஜெயராம் வெங்கடேசன் கூறியதாவது:
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு நடத்தப்பட்ட முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில், 'சேவை பெறும் உரிமை சட்டம்' இந்த அரசாங்கத்தால் கொண்டு வரப்படும், என அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து தமிழக அரசு சட்ட மசோதா தயாரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. எங்கள் இயக்கம் சார்பில், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து சட்டத்தில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து தெரிவித்ததுடன், நாங்கள் தயாரித்துள்ள மாதிரி சட்ட மசோதாவையும் வழங்கியுள்ளோம். இந்த சட்ட மசோதா குறித்து மக்களிடம் கருத்துக்களை பெற்று, அதற்குப்பின் சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளோம்.
'சேவை பெறும் உரிமை சட்டம்' என்பது அனைத்து மக்களுக்கும் அரசு சேவைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் கிடைப்பதை ஒரு உரிமையாக அறிவிக்கப்படுவது ஆகும். ஒவ்வொரு அரசு சேவைக்கும், உதாரணமாக பட்டா ஜாதி சான்றிதழ், வாரிசு சான்றிதழ் என்பது உள்ளிட்ட ஒவ்வொரு அரசு சேவையை பெறுவதற்கும் ஒரு குறிப்பிட்ட காலம் அவகாசம் உண்டு. இதற்கு, சிட்டிசன்ஸ் சார்ட்டர் என்று பெயர்.
இந்த சட்டத்தின்கீழ், ஒவ்வொரு குடிமகனுக்கும் எத்தனை நாட்களுக்குள் அவர்கள் விண்ணப்பித்த சேவை கிடைக்கும் என்பதை அறிவிக்க வேண்டும். அறிவிப்புடன் நின்றுவிடாமல் அரசு அலுவலகங்கள் மற்றும் அவற்றின் இணையதள பக்கங்களிலும் இது குறித்து விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த சேவை முழுக்க, முழுக்க இணையதளம் வழியாக வழங்குவதற்கு வழியை ஏற்படுத்தி வேண்டும்.
முதலில் சேவை பெற விண்ணப்பித்தால், எண்ணுடன் கூடிய ரசீது வழங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தை ஏற்பதும், அதை நிராகரிப்பதும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட, காலத்துக்குள் சேவை கிடைக்காத போது, விண்ணப்பித்தவர் மேல்முறையீடு செய்ய வசதி ஏற்படுத்த வேண்டும். விண்ணப்பதாரரின் ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அந்த விண்ணப்பத்தை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். விண்ணப்பதாரர் தரப்பில் ஏதேனும் தவறு இருந்தால், அதை நிராகரிக்கலாம்.
இரண்டாவது மேல்முறையீடு செய்ய தன்னிச்சையான ஒரு சேவை ஆணையத்தை அமைக்க வேண்டும். அந்த சேவை ஆணையத்தின் தலைவரை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி உள்ளிட்டோர் அடங்கிய பரவலான ஒரு குழுவினர் தான் தேர்வு செய்ய வேண்டும். அப்போது தான், நேர்மையான ஒருவர் அந்த ஆணையத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு ஏற்படும். இந்த ஆணையம் ஒவ்வொரு வழக்கிலும் விண்ணப்பதாரர் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரி இருவரையும் அழைத்து விசாரிக்க வேண்டும். ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தும் சேவை வழங்காமல் இருந்தால் உடனடியாக மனுதாரருக்கு சேவை வழங்க உத்தரவிட வேண்டும்.அந்த சேவை வழங்கும் வரை வழக்கை முடிக்க கூடாது.
அரசு துறை அதிகாரிகள் தவறு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த அதிகாரிக்கு அவர் சம்பளத்திலிருந்து 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விண்ணப்பதாரரின் தவறு இல்லாமல், ஏதேனும் ஒரு காரணத்திற்காக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு அல்லது காலதாமதம் ஏற்பட்டு இருந்தால், சம்மந்தப்பட்ட நபருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
குறிப்பிட்ட காலத்துக்குள் விண்ணப்பித்த சேவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கேட்பதற்கு முக்கிய காரணமே, இன்று அனைத்து துறைகளிலும் லஞ்சம் கேட்கப்படுகிறது. லஞ்சம் வழங்காத போது, அந்த சேவை வழங்குவது தாமதமாகிறது.
இதுபோன்ற பிரச்சினைகளால், பாதிக்கப்படாமல் இருக்க, தவறு செய்யும் அரசு அதிகாரிகளை தகவல் அறியும் உரிமை சட்டம் போல தண்டிப்பதற்கு உண்டான வழி இருக்க வேண்டும். அப்போது தான், நேர்மையான முறையில் மக்களுக்கு அரசின் சேவை சென்றடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் தியாகராஜன் கூறியதாவது:
சேவை பெறும் உரிமை சட்டத்தினால் அரசாங்க அலுவலகத்தில் உள்ள அனைத்து சேவைகளும் பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்கப் பெறும். குறிப்பாக, பிறப்பு சான்றிதழ் , இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், குடிநீர் இணைப்பு, மின் இனைப்பு, மின்சார தடை (உடனே விரைந்து சரி செய்யப்படும்) உட்பட நூற்றுக்கணக்கான சேவைகள் குறித்த நேரத்தில் மக்களுக்கு கிடைக்கும். குறிப்பாக, ஜாதி சான்றிதழ் சரியான நேரத்தில் கிடைக்கும் பட்சத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சேர்வதில் தாமதம் ஏற்படாது.
இதனால், கால தாமதம் காரணமாக, நீதிமன்றங்களுக்கு செல்வது தவிர்க்கப்படும். அரசாங்க அதிகாரிகள் சரியாக பணி செய்வார்கள். நாளடைவில் லஞ்சம் கொடுக்க தேவையில்லாமல் போகும். அரசு அறிவிக்கும் தாலிக்கு தங்கம், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட திட்டங்கள் மக்களுக்கு உடனே சென்றடையும். அரசு அதிகாரிகள் குறித்த நேரத்தில் பணி செய்யவில்லை என்றால் அபராதம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. (சட்டத்தில் சரத்தை எப்படி கொண்டு வரப்படுகிறதோ அதை பொருத்து).
இவ்வாறு அவர் கூறினார்.