கோவை: கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மிகவும் அலட்சியமாக பாதுகாப்பற்ற நிலையில் நடைபெறும் மேம்பால பணிகள் காரணமாக எல்.எம். டபிள்யூ அருகே அரசு பேருந்து சேற்றில் சரிந்து நின்றது. அதில் பயணித்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அலட்சியத்தின் உச்சத்தில், கோவை பெரியநாயக்கன்பாளைம் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதாக, பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், இன்று அரசு பேருந்து அதே பகுதியில் சேற்றில் சரிந்து நின்ற சம்பவம், பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மிகவும் அலட்சியமாக பாதுகாப்பற்ற நிலையில் நடைபெறும் மேம்பால பணிகள் காரணமாக எல்.எம். டபிள்யூ அருகே அரசு பேருந்து சேற்றில் சரிந்து நின்றது. அதில் பயணித்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை 1.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு, சுமார் ரூ.85 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுமான பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக, பெ.நா.பாளையம் அருகே எல். எம். டபிள்யூ பிரிவிலிருந்து, சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள், புளிய மரங்கள் அகற்றப்பட்டு தற்போது, மேம்பாலம் கட்டுமான பணி வேகமாக நடந்து வருகிறது.
எல். எம். டபிள்யூ பிரிவு பெ.நா பாளையம் பஸ் ஸ்டாண்ட், சாமிசெட்டிபாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் தூண்கள் அமைக்க, ராட்சத குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. இதில், எல். எம். டபிள்யூ பிரிவு பகுதியில் இருந்து சாமிசெட்டிபாளையம் வரை தூண்கள் அமைக்கும் பணி, வேகமாக நடந்து வருகிறது. இதனிடையே, பல இடங்களில் பில்லர் அமைக்கப்பட்டுள்ள போதிலும், சில இடங்களில் ராட்சத குழிகள் தோண்டப்பட்டு பில்லர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அலட்சியமாக, முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை, ராட்சத குழிகளை ஒட்டியபடி தான் வாகனங்கள் அனைத்தும் செல்கின்றன. ராட்சத குழிகள் அருகில் தடுப்புகள் போதுமான அளவு அமைக்கப்படவில்லை. சர்வீஸ் சாலைகள் இல்லாததால் மழை காலங்களில் முழுவதும் அப்பகுதி பல கீலோ மீட்டர் தூரம் சேறாக உள்ளது என்று பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக கோவையில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெ.நா.பாளையம் பகுதியில் மேம்பாலம் பணிகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இந்நிலையில், இன்று அவ்வழியாக சென்ற அரசு பேருந்து சேற்றில் சிக்கி சரிந்து நின்றது. இதில் பயணிகள் பலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இது போன்ற விபத்துகள் தினசரி நடப்பதாக தெரிவிக்கும் பொதுமக்கள், இனியாவது சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.