கோவை: கோவை மாவட்டத்தில் ஓடைகள், ஆறுகள், வாய்க்கால்கள் குறுக்கே ரூ.68 கோடி செலவில் 645 தடுப்பணைகள் கட்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் ஓடைகள், ஆறுகள், வாய்க்கால்கள் குறுக்கே ரூ.68 கோடி செலவில் 645 தடுப்பணைகள் கட்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் மழைநீரை சேமிக்கும் வகையிலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும் ஓடைகள், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில் காரமடை, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, ஆனைமலை, எஸ்.எஸ்.குளம், அன்னூர், சூலூர், சுல்தான் பேட்டை ஆகிய 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
இந்த ஊராட்சி ஒன்றியங்களுக்கு கீழ் 228 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஈடுபட்டு உள்ளது. ஊரக வேலை உறுதி திட்டம், கழிப்பறை கட்டுதல், தடுப்பணை அமைத்தல், பசுமை வீடுகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் இந்த துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், கடந்த 2020-21-ம் நிதியாண்டில் கிராமப்புறங்களில் ரூ.68 கோடி செலவில் 645 தடுப்பணைகள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
2020-21-ம் நிதியாண்டில் மாவட்டத்தில் உள்ள ஓடைகள், ஆறுகள், வாய்க்கால்கள் குறுக்கே 645 தடுப்பணைகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதில், தற்போது வரை 310 தடுப்பணைகள் முழுவதும் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இதில், காரமடையில் 20 தடுப்பணைகள், மதுக்கரை 5, பெரியநாயக்கன் பாளையத்தில் 13, தொண்டாமுத்தூர் 11, கிணத்துக்கடவு 39, பொள்ளாச்சி வடக்கு 81, பொள்ளாச்சி தெற்கு 36, ஆனைமலை 51, எஸ்.எஸ்.குளம் 4, அன்னூர் 20, சுல்தான்பேட்டை 30 தடுப்பணைகள் முழுவதும் கட்டப்பட்டு உள்ளன. மீதம் உள்ள தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பணைகள் மூலம் அந்த பகுதி விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை தேக்கி வைக்க முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்