கோவை: தடுப்பூசி டோக்கன் வழங்காததால் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை: கோவை வெள்ளகிணறு பகுதியில் தடுப்பூசி டோக்கன் வழங்காததால் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை பரவி வருவதை தொடர்ந்து இந்தியா முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைகளில் டோக்கன் மூலம் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று வெள்ளகிணறு மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி செலுத்த 100 டோக்கன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். ஆனால் அங்கு 60 டோக்கன்கள் மட்டுமே வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் டோக்கன் வழங்கிய அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அங்கிருந்து புறப்பட கிளம்பிய அதிகாரியின் இரு வாகனத்தை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.