கோவை: கொரோனா பெருந்தொற்று நடவடிக்கையாக கோவையில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், அத்தியாவசியப் பணிகளில் இயங்கும் சிறுகுறு தொழில்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் கெடுபிடி காண்பிக்கிறது.
கோவை: கொரோனா பெருந்தொற்று நடவடிக்கையாக கோவையில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், அத்தியாவசியப் பணிகளில் இயங்கும் சிறுகுறு தொழில்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் கெடுபிடி காண்பிப்பது குறித்து போசியா சார்பாக ஆணையாளருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை போசியா(FOCIA) சார்பாக கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் சிறுகுறு தொழில்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் கெடுபிடி காண்பிப்பது குறித்து மனு அளிக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது போசியாவைச் சார்ந்த ஒருங்கிணைப்பாளர்களான ஜேம்ஸ், ரவீந்திரன், சுருளிவேல், ஷாஹுல் ஹமீத் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆணையாளரிடம் அளிக்கப்பட்ட மனுவில், ‘‘தற்போது நமது கோவை மாவட்டத்தில், தளர்வுகள் இல்லாத ஊரடங்கு தொடர்கின்றது. இந்த ஊரடங்கு காலத்திலும் அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொமிற்சாலைகள் குறைந்த பணியாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது.
இதன்படி விவசாய இயந்திரங்கள், ஆட்டோமொபைல், மருத்துவ உபகரணங்கள், இராணுவ உபகரணங்கள், மற்றும் உணவு உற்பத்தியில் ஈடுபடும் தொழிற்சாலைகளும், மேலும் ஏற்றுமதி செய்யும் தொழில்களும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக அரசின் அறிவிக்கையின்படி இயங்கும் தொழிற்சாலைகளை, சோதனை செய்ய மாநகராட்சி அதிகாரிகள் வருகின்றனர்.
அவ்வாறு சோதனைக்கு வரும் மாநகராட்சி அதிகாரிகள், செயல்படும் தொழிலகங்களை ‘‘மாவட்ட ஆட்சியர் கொடுத்துள்ள அனுமதி உள்ளதா?'' என கேட்கின்றனர்.
ஊரடங்கு ஆரம்பித்த காலத்திலிருந்து, இதுவரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள தொழிற்பிரிவுகளுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தனியாக அனுமதிச்சான்று ஏதும் வழங்கப்படவில்லை. தமிழக அரசின் எந்த அறிவிக்கையிலும் செயல்படும் தொழிற்சாலைகள் மாவட்ட ஆட்சியரின் அனுமதிச்சான்று பெறவேண்டுமென்று குறிப்பிடப்படவில்லை.
சோதனை செய்யும் மாநகராட்சி அதிகாரிகள் இதை ஏற்க மறுத்து, அபாராதம் விதிக்கின்றனர். மாவட்ட ஆட்சியரின் அனுமதிச்சான்று இல்லை என்றால் தொழிற்சாலையை மூடும்படி நிர்ப்பந்தம் செய்கின்றனர். ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் அல்லது வேறு எந்த ஆவணங்களைக் காட்டினாலும் அவற்றைப் பார்க்காமல் அலட்சியம் செய்கின்றனர்.
இதனால் 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்கி வரும் ஒருசில தொமிற்சாலைகளும் முடக்கப்படுகின்றன. தொழிலாளர்களும் வேலை இழந்து தவிக்கின்றனர். கடன் சுமைகளில் தள்ளாடும் சிறுகுறு தொழில்கள் வருமானம் அனைத்தையும் இழந்து மேலும் ஆர்டர்களும் பறிபோகும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடும் தொழிற்சாலைகளுக்கு மாவட்ட ஆட்சியர் தனியாக “அனுமதிச்சான்று” வழங்கும் முறை எதுவும் இல்லை என்பதை மாவட்ட நிர்வாகம் சென்ற வாரம் தெளிவன்டுத்தியுள்ளது.
தமிழக அரசின் அறிவிக்கையே (GO) போதுமானது என்று மீண்டும் மீண்டும் மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. சோதனைக்கு வரும் அதிகாரிகளுக்கு இதை தெளிவு படுத்துமாறும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். இதற்கு மேலும் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தியில் செயல்படும் ஒரு சில சிறு குறு தொழில்களையும் மூடச்சொல்லி நிர்ப்பந்தம் செய்வது அரசு ஆணைகளை மீறுவதாக உள்ளது.
எனவே, மதிப்பிற்குரிய மாநகராட்சி ஆணையாளர் இதில் உடனடியாகத் தலையிட்டு சோதனை செய்யும் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரின் அனுமதிச்சான்றை கேட்டு நிர்ப்பந்தம் செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்த பணிவுடன் வேண்டுகிறோம்.
அரசு அனுமதித்துள்ள சிறு குறு தொழிற்சாலைகள் உரிய கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைளைக் கட்டாயமாகக் கடைப்பிடித்து இயங்க வேண்டடும் என நாங்களும் வலியுறுத்தி வருகிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.