கோவை: கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் ஹோட்டல் விளம்பரப் பலகை விழுந்தது. இதில் சிக்கிய நடைபாதை வியாபாரிகள் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கோவை: கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் ஹோட்டல் விளம்பரப் பலகை விழுந்தது. இதில் சிக்கிய நடைபாதை வியாபாரிகள் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கணுவாய்ப்பாளையம் பிரிவு உள்ளது. இங்கு கணுவாய்ப்பாளையம் கிராமத்தை சேர்ந்த கனகராஜ் (50). இவரது மனைவி ரம்யா (43) ஆகியோருக்கு சொந்தமான 4 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தில் ஹோட்டலுக்காக கட்டடம் கட்டியுள்ளார். இதனை டி.என்.43 என்ற ஹோட்டல் உரிமையாளர் முஜீப்(50) என்பவருக்கு ரூ.45,000 மாத வாடகைக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் கணுவாய்பாளையம் பிரிவு பகுதியில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இதையொட்டி செவ்வாய்க்கிழமை நடந்த வாரச்சந்தைகாக 20-க்கும் மேற்பட்ட சில்லறை காய்கறி வியாபாரிகள் வருகை தந்து சாலையோரத்தில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்துகொண்டிருந்தனர். அப்போது புதியதாக அமைத்துக் கொண்டிருந்த இந்த டி.என்.43 ஹோட்டலின் பெயர் பலகை அமைக்க ஏற்படுத்தப்பட்டிருந்த சுமார் 500 கிலோ எடைகொண்ட இரும்பு ராடு கடையின் முன் காய்கறி கடையை வைத்திருந்த கணுவாய்ப்பாளையம் அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து மகன் செல்வராஜ் (50), செல்வராஜ் மகன் குஞ்சா (45), பொன்னம்மாள் (70)ஆகியோர் மீது விழுந்தது.
இதில் இவர்கள் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் செல்வராஜ் பின்னந்தலையில் பலத்த காயமடைந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து, தற்போது மேல் சிகிச்சைக்காக கோவை அரசுமருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். குஞ்சா மற்றும் பொன்னம்மாள் ஆகியோர் பின்னந்தலையில் அடிபட்டு மேட்டுப்பாளையம் அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுகுறித்து காரமடை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.