கோவை: அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடும் தொழிற்சாலைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதிச்சான்று வழங்கும் முறை உள்ளதா என்பதை தெளிவு படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என கோவை தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
கோவை: அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடும் தொழிற்சாலைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதிச்சான்று வழங்கும் முறை உள்ளதா என்பதை தெளிவு படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என கோவை தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
கோயம்புத்தூர் தொழில்துறை கூட்டமைப்பு சங்கங்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரியுள்ள கோரிக்கை மனுவில், ‘‘தற்போது நமது கோவை மாவட்டத்தில், தளர்வுகள் இல்லாத ஊரடங்கு தொடர்கின்றது. இந்த ஊரடங்கு காலத்திலும் அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் குறைந்த பணியாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது.
இதன்படி விவசாய இயந்திரங்கள், ஆட்டோமொபைல், மருத்துவ உபகரணங்கள், இராணுவ உபகரணங்கள், மற்றும் உணவு உற்பத்தியில் ஈடுபடும் தொழிற்சாலைகளும், மேலும் ஏற்றுமதி செய்யும் தொழில்களும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழக அரசின் அறிவிக்கையின்படி இயங்கும் தொழிற்சாலைகளை சோதனை செய்ய அதிகாரிகள் வருகின்றனர்.
அவ்வாறு சோதனைக்கு வரும் அதிகாரிகள் செயல்படும் தொழிலகங்களை மாவட்ட ஆட்சியர் கொடுத்துள்ள அனுமதி உள்ளதா என கேட்கின்றனர்.
ஊரடங்கு ஆரம்பித்த காலத்திலிருந்து, இதுவரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள தொழிற்பிரிவுகளுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தனியாக அனுமதிச்சான்று ஏதும் வழங்கப்படவில்லை. தமிழக அரசின் எந்த அறிவிக்கையிலும் செயல்படும் தொழிற்சாலைகள் மாவட்ட ஆட்சியரின் அனுமதிச்சான்று பெறவேண்டுமென்று குறிப்பிடபடவில்லை.
சோதனை செய்யும் அதிகாரிகள் இதை ஏற்கமறுத்து, அபாராதம் விதிக்கின்றனர். மாவட்ட ஆட்சியரின் அனுமதிச்சான்று இல்லை என்றால், தொழிற்சாலையை மூடும்படி நிர்ப்பந்தம் செய்கின்றனர்.
இதனால் 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்கி வரும் ஒருசில தொழிற்சாலைகளும் முடக்கப்படுகின்றன. தொழிலாளர்களும் வேலை இழந்து தவிக்கின்றனர்.
இந்தநிலையில், அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடும் தொழிற்சாலைகளுக்கு மாவட்ட ஆட்சியர், அனுமதிச்சான்று வழங்கும் முறை உள்ளதா என்பதை தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். அனுமதிச்சான்று வழங்கப்பட்டால் விண்ணப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.
தமிழக அரசின் அறிவிக்கையே போதுமானது என்றால், சோதனைக்கு வரும் அதிகாரிகளுக்கு இதைத் தெளிவு படுத்துமாறும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், தடுப்பூசி போடுவதில் சிறுகுறு தொழில்களின் பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். சிறு குறு தொழில் அமைப்புகள் தடுப்பூசி முகாம் நடத்த முன் வரும்போது தடுப்பூசி உரிய ஒதுக்கீடு செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.