கோவை: கோவை நஞ்சுண்டாபுரத்தில் உருமாறிய கொரோனா தொற்று பரவுவதால் அதிகம் பேர் உயிரிழப்பதாக பரவி வரும் வதந்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோவை: கோவை நஞ்சுண்டாபுரத்தில் உருமாறிய கொரோனா தொற்று பரவுவதால் அதிகம் பேர் உயிரிழப்பதாக பரவி வரும் வதந்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் கொரோனா நோய்கிருமியின் தாக்கம் தற்போது பொது மக்களிடையே குறைந்து வருகிறது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக நோய்த்தொற்றில் இருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
“கோவை நஞ்சுண்டாபுரத்தில் அதிகமான அளவில் உருமாறிய கொரோனா பரவியுள்ளதாகவும், அதனால் மக்கள் பலர் இறந்துள்ளதாக சில விஷமிகள் பொய்யான தகவலை பரப்பிவருவதாக மாநகராட்சியின் கவனத்துக்கு வந்துள்ளது. நஞ்சுண்டாபுரத்தில் நோய்தாக்கத்தை கண்டறிய இதுவரை 650 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி கடந்த 10 நாட்களில் 56 நபாகளுக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோய்தொற்று பரவல் உள்ள பகுதி உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு மாநகராட்சி பணியாளர்கள் வீடுவீடாக சென்று மக்களிடம் காய்சல், இருமல், சளி, மூச்சுத்திணறல், மயக்கம், அதிக சோர்வு மற்றும் வயிற்றுப்போக்கு இருக்கிறதா என்று விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையின் அடிப்படையில் பாதிப்பு இருப்போரை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் உதவிகள் உடனுக்குடன் செய்யப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் இதுமாதிரியான பொய்யான வாந்திகளை நம்பவேண்டாம்.
மேலும் பொய்யான தகவல்களைப் பரப்பிய விஷமிகள் மீது மேல் நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.”
இவ்வாறு மாநகராட்சி செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.