கோவை: திமுக ஆட்சியில் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக பாஜக துணை தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவை: திமுக ஆட்சியில் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக பாஜக துணை தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவை பொன்னையராஜபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய "மோடி கிட்டை" பாஜக மாநிலத் துணைத்தலைவர் அண்ணாமலை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது;
“ஒரு மாநிலம் எவ்வளவு தடுப்பூசி போட்டுள்ளது, எவ்வளவு வீணாகியுள்ளது,மாநிலத்தில் எவ்வளவு கொரோனா தொற்று என்பதை பொறுத்து மத்திய அரசு தடுப்பூசிகளை ஒதுக்கி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமானதிலிருந்து தற்போது தடுப்பூசிகள் அதிகமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் 43 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஜூலை 21-ம் தேதி முதல் மத்திய அரசே தடுப்பூசிகளை நேரடியாக விநியோகிக்கும், கோவையை வேறு மாவட்டமாக பார்க்கக்கூடாது, தொழில்துறை அதிகம் நிறைந்த கோவையில் நோய் பரவும் தன்மை அதிகம் உள்ளது. கடந்த மூன்று நாட்களாக கோவையில் அதிகப்படியான இறப்பு பதிவாகி வருகிறது. ஒன்றரை மாதமாக தத்தளித்து வரும் கோவைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் அதிக தடுப்பூசிகளை வழங்க வேண்டும்.
2006-2010 வரை முதல்வராக இருந்த கருணாநிதி மத்திய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தினார்..10 வருடங்களுக்கு பிறகு ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக அரசு புதிதாக ஒன்றிய அரசு என்ற புது வார்த்தையை ஆரம்பித்துள்ளார்கள். கருணாநிதி மத்திய அரசு என கூறியதை திமுகவினர் தவறு என கூறுகிறார்களா? கருணாநிதிக்கு தெரியாத சட்டம்,அரசியலமைப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிந்து விட்டதா?
தமிழ்நாடு தமிழகமா, ஒன்றிய அரசா மத்திய அரசா என்பதெல்லாம் தேவையில்லாத பேச்சு. நிதி அமைச்சர்,சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் அவரவர் துறைகளை பேசமால் வேறு துறைகளை பற்றி பேசி வருகின்றனர். கடந்த ஒரு மாதகாலமாக கோவை புறக்கணிக்கப்பட்டது உண்மைதான். பிரச்சனை துவங்கியவுடன் தடுப்பூசி தருகின்றனர். மேலோட்டமாக பார்ப்பதற்கு ஒரு காழ்ப்புணர்ச்சி உள்ளது.
ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வர் என கூறுகிறார். ஆனால் நிதி அமைச்சர்,செய்தி தொடர்பாளர்களோ தொலைக்காட்சியில் பேசும் போது மோடியிடம் கேளுங்கள் என கூறுகின்றனர். எங்களுக்காக ஓட்டு போட்டார்கள் எனவும் கேட்கின்றனர். உண்மையில் முதல்வருக்குக் கீழ் அமைச்சர்கள் முழு கட்டுப்பாடோடு தான் உள்ளார்களா என்ற குழப்பம் வருகிறது. குறிப்பாக முதல்வர் மத்திய அரசுடன் இணக்கமாக செல்வதாக பேசி வருகிறார். நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஜி.எஸ்.டி கவுன்சிலில், எதிர்கட்சியாகவே பேசி வருவதை காட்டுகிறது. இதனால் தமிழக மக்கள் தான் பாதிக்கப்படுவர். இதை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.”
இவ்வாறு பாஜக துணை தலைவர் அண்ணாமலை கூறினார்.