கோவை: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுகின்றனர். அவர்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது திமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
கோவை: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுகின்றனர். அவர்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது திமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்பியவர்கள் அந்த வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் தங்களுக்கென ஒரு தனி அணியை அமைத்துக்கொண்டு தொடர்ந்து கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதாக திமுக தொண்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து திமுக தொண்டர்கள் கூறியதாவது, ‘‘நடந்து முடிந்த தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு கிடைக்காதவர்கள் திமுகவுக்கு எதிராக தேர்தல் பிரசாரத்தின் போது செயல்பட்டனர். ஒரு சில இடங்களில் பகிரங்கமாகவே ஓட்டு கேட்டு செல்லுமிடங்களில் திமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று கூறினர்.
தேர்தல் நேரம் என்ற காரணத்தால் இந்தப் பிரச்சினைகள் குறித்து வேட்பாளர்கள் தரப்பில் பெரிய அளவில் கவனம் செலுத்த முடியவில்லை. தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் தற்போது கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர். இருப்பினும் தனிப்பெரும்பான்மையுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது.
இதனிடையே கொரோனா நோய்த்தொற்று பரவல் இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னைக்கு அடுத்து கோவை மாவட்டத்தில்தான் மிக அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகுந்த அக்கறையுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் மருத்துவ வசதிகளை கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சென்றடைய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்காக அமைச்சர்கள், சிறப்பு அதிகாரிகள் நியமித்ததுடன் நின்றுவிடாமல் அவரே பலமுறை கோவைக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு சென்றுள்ளார்.
இத்தனை நடவடிக்கைகள் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும் திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் தங்களுக்கு என தனி அணி அமைத்துக் கொண்டு பல்வேறு குளறுபடிகளை செய்து வருகின்றனர். இதனால் கட்சியின் வளர்ச்சிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக நடந்து வரும் சம்பவங்களே இதற்கு சிறந்த சான்றாகும். தடுப்பூசி செலுத்தும் முகாம்களுக்கு சென்று டோக்கன்களை வலுக்கட்டாயமாக வாங்கி தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கொடுப்பது, மருத்துவர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது, மக்களுக்கு உதவி செய்யாமல் மக்களை மிரட்டும் வகையில் நடந்து கொள்வது என பல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மக்களைக் காக்க தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் நேரடியாக ஆய்வு செய்து முன்கள பணியாளர்களாக விளங்கும் டாக்டர்கள் செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி சென்றுள்ளார்.
மக்கள் நலனுக்காக இத்தனை நற்செயல்களை முதலமைச்சர் செய்து வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் திமுகவினர் சிலர் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவது தொண்டர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலை தொடர்ந்தால், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலிலும் கோவை மாவட்டத்தில் திமுகவிற்கு மிகுந்த ஏமாற்றமே மிஞ்சும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக கோவை மாவட்டத்தில் உள்ள உட்கட்சி பூசல்கள் மற்றும் குளறுபடிகள் குறித்து விரிவாக விசாரணை நடத்துவதுடன், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளும் திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கை ஏற்படும்.
இதுவே,அனைத்து திமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாகும்''என்றுதிமுக தொண்டர்கள் தெரிவித்தனர்.