கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் கடந்த மாதம் கொரோனா தொற்று 70 சதவீதமாக அதிகரித்திருந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி தொற்றின் பரவல் 55.91 சதவீதமாக குறைந்துள்ளது, மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் கடந்த மாதம் கொரோனா தொற்று 70 சதவீதமாக அதிகரித்திருந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி தொற்றின் பரவல் 55.91 சதவீதமாக குறைந்துள்ளது, மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் தினமும் 3 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 30 க்கும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி இறந்து வருவது, மக்களிடையே பெரும் பீதியை உருவாக்கியது. பாதிக்கப்பட்டோரில், 15 லட்சம் பேர் வசிக்கக்கூடிய மாநகராட்சி பகுதியில் 70 சதவீதம் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால், நகர பகுதிகளில் மாநகராட்சி சார்பில் போர்க்கால அடிப்படையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. துரித நடவடிக்கைகளால், கொரோனா பரவலின் தாக்கம் 70 சதவீதத்தில் இருந்து படிப்படியாக 55.91% குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் கோவை மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்களாக இருந்தனர். ஆனால், தற்போதைய நிலவரப்படி, கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 55.91 சதவீதம் பேர் மட்டுமே மாநகராட்சி பகுதியில் உள்ளனர்.
இதற்கு அடுத்து சூலூர் பகுதியில் 8.75 சதவீதம் பேர் உள்ளனர். கோவை மாநகராட்சிக்கு அடுத்து சூலூர் பகுதியில் தான் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. மாவட்டத்திலேயே தொற்று பாதிப்பு குறைந்த இடமாக வால்பாறை உள்ளது. இங்கு 0.31 சதவீதம் என்ற அளவில் மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் உள்ளனர்.
தமிழக அரசின் வழிக்காட்டுதல் படி மாநகராட்சி நிர்வாகம் எடுக்கும் தொடர் நடவடிக்கை காரணமாக தொற்று குறைந்து வருகிறது. இருப்பினும், மக்கள் அனைத்து கொரோனா விதிமுறைகளையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில், "மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று குறைந்து வருவது சற்று நிம்மதியளிக்கின்றது. மக்கள் பலர் விதிமுறைகளை பின்பற்றினாலும் சிலர் பின்பற்றுவது இல்லை. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றனர்.