கோவை: ஒரே சமயத்தில் ஒரு மோடத்தை மூன்று பேர் பயன்படுத்தினாலும் இன்டர்நெட் வேகம் சீராக இருக்க உதவும் வகையில் ‘சிக்னல் பூஸ்டர்' என்ற கருவியை கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கண்டுபிடித்துள்ளார். தற்போது மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் கருவியை விட மிகக்குறைந்த விலையில் இதை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
கோவை: ஒரே சமயத்தில் ஒரு மோடத்தை மூன்று பேர் பயன்படுத்தினாலும் இன்டர்நெட் வேகம் சீராக இருக்க உதவும் வகையில் ‘சிக்னல் பூஸ்டர்' என்ற கருவியை கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கண்டுபிடித்துள்ளார். தற்போது மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் கருவியை விட மிகக்குறைந்த விலையில் இதை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி எலக்ட்ரானிக்ஸ் படித்து வரும் மாணவர் பரத்குமார் நம்மிடம், ‘‘மக்களுக்கு பயன்படும் வகையில் குறைந்த விலையில் சிறந்த தரத்துடன் விளங்கும் பல்வேறு பொருட்கள் தயாரிக்க திட்டமிட்டு எனது முயற்சியைத் தொடங்கினேன். இதுவரை தானியங்கி கிருமி நாசினி மெஷின், ஸ்கிராப் பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்ட சைக்கிள் மற்றும் உணவுப் பொருட்களில் ரசாயன அளவை கண்டுபிடிக்க உதவும் (PH) கருவி உருவாக்கியுள்ளேன்.
மத்திய அரசின் குறு, சிறு நடுத்தர தொழில் அமைச்சகத்தின்(MSME) மாணவர் பிரிவின் கீழ் கண்டுபிடிப்புகள் பதிவு செய்யப்பட்டு பின் அவற்றை முறைப்படி விற்பனை செய்து வருகிறேன்.
தற்பொழுது நான்காவது படைப்பாக ‘சிக்னல் பூஸ்டர்' என்ற கருவியை உருவாக்கி உள்ளேன். இந்தக் கருவி பயன்படுத்துவதன் மூலம் இன்டர்நெட் மோடத்தை ஒரே நேரத்தில் மூன்று பேர் பயன்படுத்தும் போதும் இன்டர்நெட் வேகம் சீரான முறையில் மூன்று பயனாளிகளுக்கும் கிடைப்பதை சிக்னல் பூஸ்டர் கருவி உறுதிப்படுத்தும்.
தற்பொழுது மார்க்கெட்டில் இதே போன்ற கருவி 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது. நான் உருவாக்கியுள்ள இந்தக் கருவி வரிகள் உட்பட 1,500 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளேன். மின்சாரத்தின் மூலம் இயங்கும் வகையில் மட்டுமின்றி ரீசார்ஜ் செய்யக்கூடிய வகையிலான பேட்டரிகளைப் பொருத்தும் வகையிலும் இந்த கருவியை வடிவமைத்துள்ளேன். இதுவரை நான் கண்டுபிடித்த மூன்று படைப்புகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் புதிய கருவிக்கும் சிறந்த வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன்'' என்றார்.
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நேரத்தை எவ்வாறு பயனுள்ளதாக மாற்றுவது என்று தெரியாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு பரத்குமார் போன்ற மாணவர் ஒரு கலங்கரை விளக்காகத் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.