கோவை: கோவையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் போதுமான அளவு தடுப்பூசி கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அதிமுக கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: கோவையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் போதுமான அளவு தடுப்பூசி கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அதிமுக கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பரவல் கடுமையாக உள்ளது.
இதனால் உயிரிழப்புகள், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வசதி கிடைக்காதது, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைக்காதது, வெண்டிலேட்டர் படுக்கை வசதி தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை, போதிய அளவில் தடுப்பு ஊசி வழங்கப்படாதது பல்வேறு இடர்பாடுகளை, கோவை மாவட்ட மக்களும் மருத்துவத்துறையினரும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை கடந்து பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
ஆகவே, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், கல்லூரிகளில் கூடுதல் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், கோவை மாவட்ட நிர்வாகம் மூலம் செய்தித்தாள்களில் வெளியிடப்படும், காலிப்படுக்கைகளில் விவரம், குறிப்பாக ஆக்சிஜன் படுக்கை வசதி விவரங்கள் தெரியப்படுத்துவதில் குளறுபடியாக உள்ளது. அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டாலும், படுக்கை வசதி இல்லை என தெரிவித்தும், கிடைத்ததும் தகவல் தருகிறோம் கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்துக் கொள்கின்றனர்.
ஆனால், செய்தித்தாள்களில் படுக்கை வசதிகள் காலியாக உள்ளது போல் வெளியிடப்படுகிறது. இதனால் நோயாளிகள் மிகுந்த அலைக்கழிப்புக்கு உள்ளாகின்றனர். இந்த நிலையை மாற்றி ஆக்சிஜன் படுக்கை வசதி குறித்து உண்மை நிலையை தகவல் கட்டுப்பாட்டு மையத்திற்கும், செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக பொது மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல, கோவையில் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பால் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம் முழுவதும், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய சிகிச்சை வழங்கவும், கருப்பு பூஞ்சை தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், எவ்வாறு பரவுகின்றது என பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு உடனடி தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கோவை மாவட்டம் முழுவதும் பொது மக்கள் வசிக்கும் அவரவர் பகுதிகளிலேயே காய்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் கிடைக்கச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா தடுப்பு ஊசிகள் இதுவரை அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்டம் முழுவதும், அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் பயன்படும் வகையில் தடுப்பு ஊசி போடப்பட்டது. இதனால் பொது மக்கள் நீண்ட வரிசையில் நிற்பது தவிர்க்கப்பட்டு, அந்தந்த பகுதியிலேயே தடுப்பு ஊசி போட்டு பயன்பெற்று வந்தனர்.
தற்போது, கோவை மாவட்டம் முழுவதும் 10 தடுப்பு ஊசி மையங்களில் மட்டுமே தடுப்பு ஊசிகள் போடப்படும் என அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதனால் 10 மையங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்து இருக்கும் சூழ்நிலையும், நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டு பொது மக்கள் அல்லல்பட்டு அவதியுறும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஒருசில தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் எளிதாக தடுப்பு ஊசி கிடைக்கின்றது. அதே நேரத்தில் பொது மக்களுக்கு தடுப்பு ஊசிகள் கிடைப்பதில்லை. இதில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் சுகாதாரத்துறை அதிகாரிகளை அறிவுறுத்தி சீர் செய்ய வேண்டும்.
கோவை மாவட்டத்தில் சுமார் 37 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக நகரப் பகுதிகளில் சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில், தடுப்பு மையங்களின் எண்ணிக்கை குறைத்தும், தடுப்பு ஊசிகளை குறைத்ததனால் தொற்று நோய் பரவல் அதிகரித்து உள்ளது. முதல் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கு, குறிப்பிட்ட கால இடைவெளியில் இரண்டாவது தடுப்பு ஊசி கிடைக்கப்பெறாமல் பொது மக்கள் மிகவும் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
மேலும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு அறிவித்தபடி தடுப்பு ஊசி கிடைப்பதில்லை. ஆகவே, பொது மக்கள் பயன்பெறும் வகையில் போதுமான அளவு தடுப்பு ஊசி கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கோவை மாவட்டத்திற்கு போதுமான அளவு கூடுதல் தடுப்பு ஊசிகளை வழங்கியும், ஏற்கனவே தடுப்பு ஊசி வழங்கப்பட்டது போல் அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் தடுப்பு ஊசிகளை போட்டுக்கொள்ள உத்தரவிட்டால் பொது மக்கள் அதிகமாக ஒரே மையத்தில் கூடுவது தவிர்க்கப்படும். பொதுமக்கள் அவரவர் வசிக்கும் பகுதிகளிலேயே தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள ஏதுவாக இருக்கும் நோய் தொற்று பரவாமல் அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட அ.இ.அ.தி.மு.கழகம் மற்றும் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.