கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக மலை ரயில் சேவை இயக்கபட்டு வருகிறது. இந்த ரயில் தடத்தினை ஒட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லாறு வரை 20க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. இந்த கிராமங்களுக்கு செல்ல மேம்பாலங்கள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் தங்களின் ஊர்களுக்கு செல்ல ரயில் தண்டவாளத்தை கடந்தே செல்ல வேண்டி இருந்தது.
இந்த நிலையில் அகில இந்திய அளவில் ஆட்கள் இல்லாத ரயில்வே கேட்டுகளை ரயில்வே நிர்வாகம் மூடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதால் மேட்டுப்பாளையம் முதல் கல்லாறு இடையே ஊட்டி ரயில் பாதையில் இரண்டு ஆட்கள் இல்லாத ரயில்வே கேட்டுகளை மூட திட்டமிட்டிருந்தது.
இதனையொட்டி பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூரினை கருத்தில் கொண்டு சுமார் 2 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில்வே சுரங்க பாலம் அமைக்க முடிவு செய்யபட்டது. முதலில் பிளாக் தண்டர் அருகே உள்ள ஆட்கள் இல்லாத ரயில்வே கேட் அருகே சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகள் புதனன்று (இன்று) துவங்கின.
இன்று காலை வழக்கம்போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட்டுச் சென்ற பின் சிறிது நேரத்தில் தண்டவாளத்தை தனியாக பிரித்து எடுத்தனர். நான்கு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ரயில் பாதையின் குறுக்கே பெரிய பள்ளம் தோண்டி தரையில் கான்கிரிட் சிலாப்புகள் பதிக்கப்பட்டன.
அதன் மீது 12 அடி நீளத்துக்கு நாலரை மீட்டர் அகலம், உயரத்தில் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த சிமென்ட் கான்கிரிட் சுரங்கப்பாலத்தை பதித்து 5 மணி நேரத்தில் சுரங்கபாதை அமைக்கும் பணியினை முடித்தனர்.
இந்த பணிக்காக பெங்களூரிலிருந்து 400 டன் எடைகள் துாக்கும் ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு அதன் பின் மண்ணை கொட்டி சமம் செய்து அதன் மீது ரயில் தண்டவாளத்தை அமைத்தனர். ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டன.
ரயில் தடத்தில் போக்குவரத்தினை நிறுத்தாமல் அதுவும் ஒரே நாளில் பாலத்தை அமைத்த நிகழ்வு மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றதை பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்த்தனர். மாலையில் உதகையில் இருந்து வந்த மலை ரயில் எவ்வித பாதிப்பும் இன்றி வந்து சேர்ந்தது.