கோவை: மருத்துவமனையை அபகரிக்க முயன்ற புகாரில் தொடர்புடைய சென்னை மருத்துவமனை சேர்மன் டாக்டர் உமாசங்கர் இன்று காலை கண்ணப்ப நகர் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கார் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கோவை: மருத்துவமனையை அபகரிக்க முயன்ற புகாரில் தொடர்புடைய சென்னை மருத்துவமனை சேர்மன் டாக்டர் உமாசங்கர் இன்று காலை கண்ணப்ப நகர் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கார் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கோவை காந்திபுரத்தில் எல்லன் மருத்துவமனை என்ற பெயரில் பிரபல மருத்துவமனை இயங்கி வந்தது. பிரபல மருத்துவரான 72 வயது ராமச்சந்திரன் இதன் உரிமையாளராவார். இவரை 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த உமாசங்கர் (வயது 54) என்ற மருத்துவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் சென்னை மருத்துவமனை என்ற பெயரில், தான் ஒரு மருத்துமனை நடத்தி வருவதாகக் கூறிய உமாசங்கர், அதன் கிளையை கோவையில் தொடங்க இருப்பதாக கூறியதாக தெரிகிறது.
வயது முதிர்வு காரணமாக மருத்துவமனையை நிர்வகிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்த ராமச்சந்திரன், எல்லன் மருத்துவமனை கட்டடத்தை வாடகைக்குவிட சம்மதித்தார். மாத வாடகை 15 லட்சம் ரூபாயும், 18 சதவீத ஜி.எஸ்.டி.வரியும் செலுத்தவேண்டும் என ஒப்பந்தம் செய்த ராமச்சந்திரன், ஆண்டுதோறும் 10 சதவீத வாடகை உயர்த்தப்படும் என்றும், கூறியதாக தெரிகிறது.
டாக்டர் ராமச்சந்திரன் கூறிய ஒப்பந்தத்தை உமாசங்கர் ஏற்றுக் கொண்டதை அடுத்து, இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர். அப்போது ஒரு கோடி ரூபாயை மருத்துவர் உமாசங்கர் முன் பணமாக கொடுத்தார். மேலும், ராமச்சந்திரன் அப்பகுதியில் பிரபல மருத்துவர் என்பதால், பழக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அந்த மருத்துவமனையிலேயே தனியாக ஒரு அறை ஒதுக்கித் தர வாடகைதாரரான உமாசங்கர் சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து, எல்லன் மருத்துவமனை பெயரை, சென்னை மருத்துவமனை என மாற்றிய உமாசங்கர், பேசியபடி வாடகை கொடுக்காமல் காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவர் உமாசங்கர் முறையாக வாடகை கொடுக்காமல் காலம் தாழ்த்தியதால், 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை ராமச்சந்திரன் கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில், வாடகை பாக்கித் தொகையான 4 கோடியே 95 லட்சத்து 71 ஆயிரம் ரூபாயை கொடுக்கும்படி உமாசங்கரிடம் ராமசந்திரன் பலமுறை கேட்டு வந்ததாகவும், ஆனால், உமா சங்கர் மருத்துவமனையை வேறு ஒருவருக்கு வாடகைக்குவிட முயற்சித்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதுபற்றி கேட்டபோது, உமாசங்கரும், அவரது மருத்துவமனை மேலாளர் மருதவாணன் என்பவரும் சேர்ந்து ராமச்சந்திரனை மிரட்டியதாக,மருத்துவர் ராமச்சந்திரன் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் செய்தார்.
போலீசில் அவர் கொடுத்த புகார் மனுவில், தனது வயோதிகத்தைப் பயன்படுத்தி, தன்னை ஏமாற்றி 100 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவமனையை அபகரிக்க முயற்சிப்பதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார். அத்துடன் தனக்கு வரவேண்டிய 4.95 கோடி ரூபாய் பணத்தை வசூல் செய்து கொடுக்குமாறு புகார் மனுவில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மருத்துவர் உமாசங்கர் மற்றும் மேலாளர் மருதவாணன் மீது கொலை மிரட்டல், மோசடி உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து கடந்த டிசம்பர் மாதம்சிறையில் அடைத்தனர். பின்னர், ஜாமீனில் வெளிவந்த டாக்டர் உமாசங்கர் தினமும் கோவை ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல ரத்தினபுரி காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு கண்ணப்பநகர் பகுதியில் நடந்து சென்றபோது, கார் மோதி சம்பவ இடத்திலேயே டாக்டர் உமாசங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பலகோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த டாக்டர் உமாசங்கர் விபத்தில் கார் மோதி இறந்தது குறித்து போலீசார் விசாரணை பல கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.