கோவை: கோவை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோணி அம்மனை வணங்கி பிரசாரத்தை தொடங்கினார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவை: கோவை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோணி அம்மனை வணங்கி பிரசாரத்தை தொடங்கினார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்கு சேகரிப்பதற்காக நேற்று மாலை முதலமைச்சரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி விமானம் மூலம் கோவை வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பி.எஸ்.ஜி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தொழிலதிபர்கள் மற்றும் வேளாண் துறையினருடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பங்கெடுத்துப் பேசினார்.
இதையடுத்து இரவில் புருக் பாண்ட்சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். அதனைத் தொடர்ந்து முதல் நாள் பிரச்சாரமான இன்று காலை 8.10 மணி அளவில் அவர் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு கோவை கோணியம்மன் கோவிலுக்கு வந்தார். கோவிலுக்கு வந்த முதலமைச்சரை அமைச்சர் எஸ். பி வேலுமணி, எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ஜுனன், பி.ஆர்.ஜி. அருண்குமார், ஓ.கே.சின்னராசு, எட்டிமடை சண்முகம் உள்பட கட்சி நிர்வாகிகள் கோயில் வாசலில் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
கோணியம்மன் கோவில் நிர்வாகிகள் சார்பில் அவருக்கு பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோணியம்மனை முதலமைச்சர் தலைவணங்கி மரியாதை செய்ய சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பாக பரிவட்டம் கட்டி முதல்வருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது முதல்வர் கோணியம்மனை தரிசனம் செய்தார்.
கோயில் நிர்வாகம் சார்பில் முதல்வருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. பிறகு கோயில் வளாகத்தில் இருந்த அனைத்து கடவுள்களையும் முதல்வர் தரிசனம் செய்த பிறகு சிறிது நேரம் கோவில் சம்பந்தமான காரியங்கள் குறித்து விசாரித்து கேட்டுத் தெரிந்து கொண்டார். இதை தொடர்ந்து அவர் கோவிலில் இருந்து விடைபெற்று புறப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
கோயில் வாசலில் காத்திருந்த கட்சித் தொண்டர்கள் உற்சாகத்தில் `நிரந்தர முதல்வர்' என்று கோஷங்களை எழுப்பினர். அங்கு வந்திருந்த கல்லூரி மாணவர்களில் ஒரு சிலர் `அரியரை பாஸ் செய்ய வைத்த முதலமைச்சருக்கு நன்றி' என கூறிச் சென்றனர். இதைக்கேட்ட முதலமைச்சர் மிகுந்த உற்சாகம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு ராஜவீதி தேர்முட்டி பகுதியில் பிரச்சாரம் செய்ய புறப்பட்டார். கோயில் வாசலில் சாலை நெடுகிலும் திரளாக கூடியிருந்த கட்சித் தொண்டர்களைப் பார்த்து கையசைத்து நன்றி தெரிவித்து புறப்பட்டுச் சென்றார்.