கோவை: கோவை அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை அட்டகாசம் செய்தது. நாய்கள் மற்றும் கோழிகளைக் கடித்து குதறிப் போட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் பீதியுடனும் இருக்கின்றனர்.
கோவை: கோவை அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை அட்டகாசம் செய்தது. நாய்கள் மற்றும் கோழிகளைக் கடித்து குதறிப் போட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் பீதியுடனும் இருக்கின்றனர்.
கோவை மதுக்கரை வனப்பகுதியின் அருகே காந்திநகர் பகுதி உள்ளது. இங்கு வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. இந்நிலையில் சமீபகாலமாக சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குடியிருப்புகளுக்கு அருகே இருக்கும் நாய்கள் மற்றும் ஆடுகளை சிறுத்தை வேட்டையாடி வருகிறது. இதுவரை 10-க்கும் மேற்பட்ட ஆடுகள், நாய்கள் சிறுத்தையால் வேட்டையாடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் குவாரி ஆபீஸ் பகுதிக்கு வந்த சிறுத்தை ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவரில் அமர்ந்திருந்தது. இதை அந்த வீட்டிலிருந்தவர்கள் படம் பிடித்துள்ளனர். இந்நிலையில் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் இருந்த சிறுத்தை, சீனிவாசன் என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை வேட்டையாட முயன்றது. ஆனால் நாய் தொடர்ந்து கத்தியதால் சிறுத்தை நாயை விட்டுவிட்டுச் சென்றுவிட்டது.
சிறுத்தையிடம் கடிபட்ட நாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆடு, நாய் போன்ற வீட்டு விலங்குகளை ருசி பார்த்ததால் அதேபகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாகவும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே சிறுத்தையை பிடிக்க மதுக்கரை வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளதாகவும், சிறுத்தையைப் பிடித்து வேறு வனப்பகுதிக்கு கொண்டுவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.