கோவை: விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 25-ம் தேதி முதல் வீடு வீடாக மக்களைச் சந்தித்து பிரசாரம் செய்ய இருப்பதாக கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
கோவை: விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 25-ம் தேதி முதல் வீடு வீடாக மக்களைச் சந்தித்து பிரசாரம் செய்ய இருப்பதாக கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை கொச்சைப்படுத்துவதைப்போல மத்திய அரசு செயல்படுகிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வாபஸ் வாங்குவதில் அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது என்று தெரியவில்லை. விவசாயிகளைப் பாதிக்கும் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசின் தவறான கொள்கைகளை எதிர்த்து தொடர் பிரச்சாரங்களை மேற்கொள்வோம்.
தமிழ் மொழி புறந்தள்ளப்பட்டு இந்தி, சமஸ்கிருதத்தை மத்திய அரசு முன்நிறுத்துகிறது. சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மத்திய அரசின் அனைத்து தில்லுமுல்லுக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணையாக இருக்கிறார். மாநில உரிமைகள் பறிக்கப்படுவதுபற்றி தமிழக முதல்வர் கவலைப்படவில்லை.

மாநில உரிமைகளைப் பறிக்கும்விதமாக கொண்டு வரப்படும் விவசாய சட்டங்களை எதிர்க்க வேண்டிய முதல்வர் அந்தச் சட்டங்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார். எனவே, வரும் 25 ம் தேதி முதல் 31 தேதி வரை தமிழகத்தில் 10 ஆயிரம் குழுக்கள் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறோம். கொரோனா காலகட்டத்தில் வருமானமின்றி பொதுமக்கள் தவித்தபோது மாதம் 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதை கருணையற்ற முதல்வர் நிராகரித்துவிட்டார். மக்கள் பட்டினியாக இருந்தபோது கொடுக்க மறுத்த முதல்வர் இப்போது மட்டும் எப்படி 2,500 ரூபாய் கொடுக்கிறார். தேர்தலை மனதில் கொண்டே இந்தத் திட்டத்தை முதல்வர் பிரச்சாரம் துவங்கும்போது அறிவித்துள்ளார். பணம் கொடுத்து மக்களை வாங்க முடியும் என நினைப்பது தவறானது. அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் சமரசமற்ற போர் நடப்பது தெளிவாகத் தெரிகிறது. அவர்களுடைய கூட்டணி கொள்கையற்ற கூட்டணி. இவர்களது கூட்டணி மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் முழுமையாக நடத்தப்படாமல் இருக்க அ.தி.மு.க அரசுதான் காரணம்.
இவ்வாறு கூறிய அவரிடம், ரஜினி மற்றும் கமல் அரசியல் கட்சி குறித்த கேள்விக்கு சினிமா வேறு, அரசியல் வேறு எனவும் ரசிகர்கள் எல்லோரும் வாக்களிக்கமாட்டார்கள். கமலின் கட்சி ஓட்டுகளை பிரிக்கத்தான் பயன்படும். அதனால்தான் அவர்களை பா.ஜ.கவின் பி.டீம் என்கிறோம் என்றார்.