கோவை: வெவ்வேறு இடங்களில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதியதில் என்ஜினியர் உள்பட 4 பேர் பலியானார்கள்.
கோவை: வெவ்வேறு இடங்களில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதியதில் என்ஜினியர் உள்பட 4 பேர் பலியானார்கள்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கஞ்சம்பள்ளியைச் சேர்ந்தவர் நந்த கோபால கிருஷ்ணன். பஸ் டெப்போவில் ஜூனியர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இன்று காலை கோபாலகிருஷ்ணன் அவினாசி அருகே நெறையம் பள்ளியில் உள்ள தனது உறவினரைப் பார்ப்பதற்காக தனது நண்பரான ஆனந்த் குமார் என்பவருடன் அவரது மொபட்டில் சென்றார்.
அவிநாசி மேட்டுப்பாளையம் சாலையில் சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள்மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்த அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை உருமாண்டம் பாளையம் நஞ்சை கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 42), தொழிலாளி. இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். வெள்ளக்கிணறு பிரிவு அருகே வந்த போது பின்னால் வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சசிகுமார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள்மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சூலூர் செஞ்சேரிமலை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் என்கிற சண்முகசுந்தரம் (வயது 40). நேற்று மாலை இவர் செஞ்சேரிமலை சூலூர் ரோட்டில் உள்ள அரசுப் பள்ளி அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சண்முகசுந்தரம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனம் குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.