கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு திமுக முன்னாள் பொறுப்பு குழு உறுப்பினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு திமுக முன்னாள் பொறுப்பு குழு உறுப்பினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக தலைவர் மு.க ஸ்டாலினை விமர்சித்து கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்யும் விதமாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெயரில்லாமல் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த போஸ்டர்கள் அதிமுகவினரால் ஒட்டப்பட்டது எனவும் அதை கண்டித்தும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கோவை நகரில் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று மீண்டும் கோவை நகரில் பல்வேறு இடங்களில் திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சிக்கும் விதமாகவும், கிண்டல் செய்யும் விதமாகவும் ரயில்நிலையம், லாலா கார்னர், டவுன்ஹால் உட்பட பல்வேறு இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.
அந்த நோட்டீசில் ஊரடங்கில் அயராது உழைத்தவரா என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படத்தையும், ஊரடங்கில் விக் வைத்தவரா என திமுக ஸ்டாலின் படத்தையும் போட்டு நோட்டீசில் கிண்டல் செய்யப்பட்டு இருந்தது.
அதேபோல, மற்றொரு போஸ்டரில் விவசாயிகளுக்காக டெல்டாவை பாதுகாத்த முதல்வரா? மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களில் கையெழுத்திட்டவரா எனவும் விமர்சனம் செய்யப்பட்டு இருந்தது. நோட்டீஸ் அடித்தவர் பெயர், அச்சடித்தவர் பெயர் எதுவும் குறிப்பிடாமல் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை திமுகவினர் கிழித்து எறிந்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் போஸ்டர் ஒட்டியவர்களை உடனடியாகவே கைது செய்ய வேண்டும் என கூறி கோவை மாநகர் மாவட்ட முன்னாள் பொறுப்பு குழு உறுப்பினர் சித்ரகலா மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வந்தவர், தான் கொண்டு வந்து இருந்த மண்ணெண்ணையை ஊற்ற முயன்றார். இதனை கண்ட அங்கிருந்த பந்தய சாலை போக்குவரத்து காவலர் சதாசிவம் மற்றும் உளவுதுறை காவலர் கருப்புசாமி ஆகியோர் சித்ரகலாவிடம் இருந்து கேனை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து, சாலையில் அமர்ந்த சித்ரகலா திமுக தலைவரை கிண்டல் செய்யும் விதமாக போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்தாதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார். விரைவில் போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்யாவிட்டால் கட்சிக்காக மீண்டும் தீக்குளிப்பேன் எனவும் கூறினார்.
இதனை தொடர்ந்து, அங்கு வந்த பந்தய சாலை போலீசார் சித்ரகலாவை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். திமுக உறுப்பினர் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் காரணமாக மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.