கோவை: கோவையில் இருசக்கர வாகனம் மரத்தின் மீது மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த மற்றொரு நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை: கோவையில் இருசக்கர வாகனம் மரத்தின் மீது மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த மற்றொரு நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியம் பாளையம் சங்கர் லே அவுட்டை சேர்ந்தவர் அஞ்சப்பர். இவர் அரசு போக்குவரத்து துறையில் ஆய்வாளராக உள்ளார். இவருடைய மகன் ஆதித்யா விக்னேஸ்வரன் (22), கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் விஜய் (20). நண்பர்களான இவர்கள் 2 பேரும் துடியலூரிருந்து கணவாயில் உள்ள நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் நேற்று சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை விஜய் ஓட்டினார்.
இந்த நிலையில், அங்குள்ள ஒரு வளைவில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர்கள் 2 பேரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆதித்யா விக்னேஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.
மேலும், விஜய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.