கோவை: கோவை கடைவீதி பகுதியில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஜவுளி மற்றும் நகைகடைகளில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுவதுடன், சமூக இடைவெளி காற்றில் பறந்ததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை: கோவை கடைவீதி பகுதியில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஜவுளி மற்றும் நகைகடைகளில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுவதுடன் சமூக இடைவெளி காற்றில் பறந்ததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் கோவை கடைவீதிகளில் புத்தாடை விற்பனை சூடு பிடித்துள்ளது.
கடைவீதி பகுதிகளில் கூட்ட நெரிசல் அதிக அளவில் காணப்பட்டது. அனைத்து விதமான கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பொதுமக்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கூடுதலாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதுடன் ஒலிபெருக்கி மூலம் கடைபிடிக்க வேண்டிய கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை எடுத்துரைத்து வருகின்றனர்.
இருந்த போதும், ஒப்பணக்கார வீதி மற்றும் காந்திபுரம் பகுதி முழுவதும் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் குவிந்திருந்தனர்.

மேலும், அதிகளவிலான கூட்ட நெரிசல் காரணமாக டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, உக்கடம், டவுன்ஹால், ரயில் நிலையம் கூட்செட் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
இதேபோல் காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, மற்றும் ஆர்எஸ் புரம் பகுதிகளில் தீபாவளி பண்டிகை விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. குடும்பத்துடன் கடைவீதியில் குவிந்த பெற்றோர்கள் மற்றும்.பெரியோர், குழந்தைகளுக்கு முககவசம் அணிவிக்காமல் பல இடங்களில் பார்க்க முடிந்தது.

அதேபோல, சாலையோரங்களில் பலர் கடை அமைத்து பெண்களுக்கான கம்மல் செயின் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் இடங்களில், கூட்டமாக நின்று பெண்கள் மற்றும் குழந்தைகள் பொருட்களை வாங்க குவிந்ததால் அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
கோவை மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் பொதுமக்களின் அலட்சியம் காரணமாக மீண்டும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முறையான தடுப்பு நடவடிக்கையை கையாள வேண்டும் எனவும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வணிகர்கள் பொதுமக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
