கோவை: கோவையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.50 கோடி மோசடி செய்த நபர் கைது! பணத்தை மீட்டு கொடுக்கும்படி முதலீடு செய்தவர்கள் கண்ணீர்..!
கோவை: கோவை பீளமேடு சிவசாமி லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் ரிதுவர்ணன் (வயது 37). இவர் கடந்த மார்ச் மாதம் முதல், அதே பகுதியில் சர்வா ஐடெக் சொல்யூஷன்ஸ் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
ஒரு லட்சம் முதலீடு செய்தால், நாளொன்றுக்கு 2.5% வட்டி அல்லது இரட்டிப்பு பணம் என்ற அவரின் , கவர்ச்சிகரமான திட்டங்களை நம்பி, சிலர் அவரது நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்துள்ளனர்.
ஆரம்ப காலகட்டத்தில், வாக்குறுதி அளித்தபடி முதலீட்டாளர்களுக்கு உரிய வட்டியை வழங்கி வந்த ரிதுவர்ணன், அவரின் வாடிக்கையாளர்களிடம், அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தனது நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறுஅழைத்து வந்தால், உரிய கமிஷன் தருவதாகவும் அறிவித்துள்ளார்.
அவர் அறிவித்தபடி, இரட்டிப்பு பணம் பெற்றவர்கள், அவர்களுக்கு தெரிந்தவர்களிடம், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வது குறித்து தெரியப்படுத்தினர். அதன்படி பெண்கள், முதியோர் என 600-க்கும் மேற்பட்டோர், மொத்தமாக ரூபாய் 25 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படியிருக்க, ஒரு கட்டத்தில் நிதி நிறுவனத்தில் இருந்து வட்டி வரவில்லை என்பதால் முதலீடு செய்தவர்கள், நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளனர், அதற்கு கொரோனாவை காரணம் காட்டி பணம் தருவதை இழுத்தடித்தாக, கூறப்படுகிறது.
இதனால், சந்தேகம் அடைந்த சில வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை திருப்பித் தருமாறு ரிதுவர்ணனிடம், பிரச்சனை செய்துள்ளனர். அவ்வாறு, பிரச்சனையில் ஈடுபட்ட நபர்களுக்கு மட்டும் ரூபாய் 50 லட்சம் வரை கொடுத்துள்ளார்.
தொடர்ந்து, மற்றவர்களுக்கு பணம் கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த மற்ற முதலீட்டாளர்கள், தங்களது பணம் முழுவதையும் திருப்பித் தருமாறு வலியுறுத்தி வந்தனர். தொடர்ந்து, ரிதுவர்ணனை தொடர்பு கொள்ள முடியாமல் போனதால், அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள், இது குறித்து கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில், டி.எஸ்.பி ராஜேந்திரன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் இதுவரை 400-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூபாய் 50 கோடி அளவுக்கு, ரிதுவர்ணன் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து, அவர் மீது வழக்கு தொடர்ந்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து முதலீட்டாளர்கள் கூறும்போது:-
மகள் திருமணத்திற்கு, குழந்தைகள் படிப்புக்கு என சேர்த்து வைத்திருந்த அனைத்தையும் கவர்ச்சிகரமான திட்டத்தை நம்பி இந்த நிதி நிறுவனத்தில் செலுத்தி விட்டோம். ஒரு சிலர் தங்கள் பென்சன் பணத்தை முழுமையாக இங்கு முதலீடு செய்துள்ளனர்.
எங்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விட்டது.
போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை திரும்ப பெற ஏற்பாடு செய்ய வேண்டும், என்று கண்ணீர் மல்க கூறினர்.