சாக்கடை நீர் தேங்கியுள்ள குளங்களை அழகுப்படுத்தி "ஐ லவ் கோவை" என எழுதிவைத்து விட்டால், கோவை ரம்மியமாக மாறிவிடுமா? - எம்எல்ஏ நா.கார்த்திக் கேள்வி

கோவை: கோவை வாலாங்குளம் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை நா.கார்த்திக் எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தார்.



கோவை: கோவை வாலாங்குளம் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா கார்த்திக், இன்று நேரில் ஆய்வு செய்தார்.



பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா கார்த்திக் எம்எல்ஏ தெரிவித்ததாவது :-



கோவையில் ரூ.62 கோடி மதிப்பில் உக்கடம் பெரிய குளம் பணிகள், ரூ.40 கோடி மதிப்பில் வாலாங்குளம் பணிகள், ரூ.31 கோடி மதிப்பில் செல்வ சிந்தாமணி குளத்தின் பணிகள், ரூ.19.36 கோடி மதிப்பீட்டில் கிருஷ்ணம்பதி குளம், ரூ.31.25 கோடி மதிப்பீட்டில் முத்தண்ணன் மற்றும் செல்வம்பதி குளம் பணிகள், சிங்காநல்லூர் குளத்தில் ரூ.12.47 கோடியில் பணிகள் போன்ற பல்வேறு கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள், என மொத்தம் சுமார் 998 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

இவற்றில், கோவை உக்கடம் பெரியகுளம் வடக்கு பகுதியில், ஸ்மார்ட் சிட்டி பணிகள் பாதிக்கப்படும் என்பதால், குளத்தில் சுமார் 25 அடி தூரத்திற்குமண் போட்டு, மூடப்பட்டு அதில் திட்டப்பணிகள் நடத்தப்பட்டுள்ளது.

குளக்கரைகளை மேம்படுத்தும்போது, குளங்களின் அளவை குறைக்கக் கூடாது, என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், நீதிமன்றத்தையும் மீறி ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் குளத்தின் கரையோர பகுதிகளை மூடி வருகின்றனர்.

மேலும், பெரியகுளத்தில் தற்போது முழு அளவில் சாக்கடை நீர் தேங்கியுள்ளது. இங்கே, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எந்த முயற்சியும் கோவை மாநகராட்சி எடுக்கவில்லை. சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் தான் சேத்துமா வாய்க்கால் மற்றும் பல்வேறு பகுதியிலிருந்து வரும் சாக்கடை கழிவு நீரை சுத்தம் செய்து குளத்திற்குள் விட முடியும். குளங்களில் உள்ள சாக்கடை நீர்தேக்கம், தடுக்காமல் பெரும் தொகை செலவிடுவதால், எந்த பயனும் கிடையாது.

குளத்தின் கரையை அழகு படுத்துவதாக சொல்லிவிட்டு, அதில் துர்நாற்றம் வீசும் சாக்கடை நீரை தேக்கி வைத்தால், மக்கள் எப்படி பயன்படுத்த முடியும்? "ஐ லவ் கோவை" என எழுதி வைத்தால் கோவை அழகாக, ரம்மியமாக மாறிவிடுமா?.

மேலும், அந்த குளக்கரையோரம், சிறிது நேரம் நின்று பார்க்கும் மக்கள், கழிவு நீரின் நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பொத்திக் கொண்டு ஓடும் அவலம் தான் நிஜத்தில் நிலவி வருகிறது.

இந்தக் குளத்தில் பணிகள் அரை குறையாக இருக்கும் போதே, கடந்த 25.06.2020 அன்று, தமிழக முதல்வரை வரவழைத்து, அவசரகதியில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ரூ.23.83 கோடி செலவில் தொடங்கப்பட்ட வாலாங்குளம் சீரமைக்கும் பணிகளும் 30 சதவீதம் கூட முடியவில்லை. இக்குளத்தில், கோவை அரசு மருத்துவமனை கழிவுநீர் தேங்குகிறது. இக்குளத்து நீரின் துர்நாற்றத்தால் சிவராம் நகர், அபிராமி நகர், சுங்கம் உட்பட பல்வேறு பகுதியைச் சேர்ந்த மக்கள் தவிக்கின்றனர். சாக்கடை நீரை சுத்திகரிக்காமல், நீர் நிலைகளை சீரமைக்காமல் அலங்கார பணிக்காக மட்டும் ஸ்மார்ட்சிட்டி நிதியில் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், செல்வசிந்தாமணி குளத்தின் கரைப்பகுதியும் 31.47 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படுகிறது. இதிலும், சாக்கடை நீர்தான் தேங்கியுள்ளது. மேற்கண்ட, குளக்கரையோர பணிகளைப் பார்க்கும் போது "ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

கோவையில் குடிநீர் விநியோகம், மின் விளக்கு, தார்ச்சாலை, வாகனம் நிறுத்த கட்டமைப்பு, பஸ் ஸ்டாண்ட் மேம்பாடு என மக்களுக்கு பயனுள்ள எந்த திட்டப்பணிகளிலும் கோவை மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தாமல், குளக்கரையை அழகாகக் காட்டுவதிலேயே, நிதியை வீணாக்கி வருகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி நிதியை வீணாக்குவதின் மூலம், ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் குளங்கள் சீரமைப்பு பணியில் பெரும் முறைகேடு நடக்கிறது. இச்செயல், கோவையில் உள்ள மக்களிடம் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

இந்த பேரிடர் காலத்திலும், திட்டப் பணிகளுக்கு புதிய டெண்டர்கள் விட்டு, அதில் முறைகேடுகள் செய்வதில்தான், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது பினாமி ஒப்பந்ததாரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.‌

கோவையில் செயல்படுத்தப்படும் மேற்கண்ட பணிகள் உள்ளிட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் அனைத்தும் தரமில்லாத பொருள்களைக் கொண்டு , தரமற்ற நிலையில் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

அரசின் சார்பில் மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளால், மக்களுக்கு உபயோகமான பலன் கிடைக்க வேண்டும். ஆனால் கோவையில், மக்களின் வரிப்பணத்தை வீணடித்து, மக்களை ஏமாற்றி செய்யப்படும் மேற்கண்ட திட்டப்பணிகள் “விழலுக்கு இறைத்த நீரைப் போல”.

உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் உள்ளிட்ட குளங்கள் சீரமைப்பு பணிகளில் நடக்கும் முறைகேடுகளையும், இது போன்ற நிர்வாகச் சீர்கேடுகளையும் , மக்களைப் பற்றி நினைக்காத, மக்களின் நலனைப் புறக்கணித்த, ஆட்சி நடைபெறுவதையும் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாக முறைகேடுகளுக்கு தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. விரைவில் மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள் என்று எச்சரிக்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது திமுக முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...