கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் கொரோனா தொற்று, தூய்மைப் பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் குறித்து அனைத்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் கொரோனா தொற்று, தூய்மைப் பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் குறித்து அனைத்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:
கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று நோய் மாநகராட்சி நிர்வாகத்தின் தொடர் தடுப்பு நடவடிக்கைகளால் படிப்படியாக குறைந்து வருகிறது. இப்பணிகளில் அனைத்து துறை அலுவலர்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை திருநாள் நெருங்கி வருவதால் பொதுமக்கள் அதிக அளவில் வெளியில் செல்வதையும், மேலும் பொருட்கள் வாங்கிட கூட்டமாக வணிக கடைகள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், ஹோட்டல்களுக்கு செல்வதை கூடுமானவரையில் தவிர்க்க வேண்டும். மேலும், பொருட்கள் வாங்க கடைகளில் அதிக அளவில் கூட்டம் கூடுவதை கடை உரிமையாளர்கள் கட்டுப்படுத்திட வேண்டும்.
மேலும், பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இவ்விழாக் காலங்களில் தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பொதுமக்களும், வணிக நிறுவனங்களும் கட்டாயமாக பின்பற்றி விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்களிடம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என கடை மேலாளர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்றார்.
அதேபோல, அனைத்து மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற வேண்டும். வீடு வீடாக சுகாதாரப் பணியாளா்கள் சென்று சளி, காய்ச்சல், இருமல் உள்ளவர்களை கண்டறியும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். பேருந்துகளில் கூட்டமாகச் செல்லுவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் தொற்று நோயிலிருந்து பாதுகாத்து, தொற்று நோய் பரவுதலை கட்டுப்படுத்திட மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் தூய்மைப் பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று குப்பைகள் சேகரிக்கப்படும் முறைகள் குறித்தும், மாநகராட்சியின் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்களின் செயல்பாடுகள் குறித்தும், வாகனங்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்படும் முறைகள் குறித்தும், வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றும் முறைகள் குறித்தும், ஒவ்வொரு பகுதிகளிலும் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள விபரங்கள் குறித்தும், தினசரி 100 கிலோ எடைக்கு மேல் திடக்கழிவுகளை உற்பத்தி செய்யும் உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அவர்களாகவே திடக்கழிவு மேலாண்மை செய்ய வேண்டும் என்பது குறித்தும் மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.
பின்னர், தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின் படியும், அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்களின் வழிகாட்டுதலின் படியும் கோவை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து மண்டலங்களில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும், பருவமழையின் காரணமாக மரங்கள் கீழே விழுந்தால் அதனை அகற்ற தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், வெள்ள பாதிப்புகள் ஏற்படும் தாழ்வான பகுதிகளில் நார செல்லும்போது அங்கு வாழும் மக்களை அப்புறப்படுத்தி தற்காலிகமாக தங்க வைத்திட பள்ளிகளை தூய்மை செய்து தயார் நிலையில் வைத்திட வேண்டும் எனவும், கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு வெள்ள நீர் பாதிப்பு ஏற்படும் அனைத்து இடங்களிலும் அடைப்புகளை நீக்கி தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.கசுமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல், அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், உதவி நிர்வாக பொறியாளர், உதவிப் பொறியாளர், சுகாதார ஆய்வாளர் (தூய்மை இந்தியா திட்டம்) திருமால், அனைத்து மண்டல சுகாதார அலுவலர்கள், மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.