கோவை: கோவைபுதூர் பகுதியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அலுவலகத்தில் கொரோனா நோய் தொற்று சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை: கோவைபுதூர் பகுதியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அலுவலகத்தில் கொரோனா நோய் தொற்று சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் குமரவேல் பாண்டியன், காவல்துறை ஆணையாளர் சுமித் சரண், இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா, அரசு மருத்துவமனை முதல்வர் காளிதாஸ் உள்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் covid-19 வைரஸ் நோய் தொற்று நடவடிக்கைகள் எந்த அளவிற்கு உள்ளது மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வரும் பணிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் என்ன என்பது போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்ததாவது :-
வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும், அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகள் மூலம் நோயாளிகளுக்கு சிறப்பான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். கவுண்டம்பாளையம் மற்றும் சுங்கம் ஆகிய இடங்களில் உள்ள அனைத்து மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்கப்பட வேண்டும். அத்துறை சார்ந்த அதிகாரிகள் அனைவரும் உடனடியாக கள ஆய்வுகளை மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றார்.
மேலும், சளி காய்ச்சல் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு தாங்களாகவே சென்று தங்களை சிகிச்சைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது வரை 12 லட்சம் குடும்பங்களுக்கு நோயெதிர்ப்பு பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்கள் அனைத்திலும் கிருமிநாசினிகள் தொடர்ந்து அடிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை உடனடியாக பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க அதிகாரிகள் உடனடியாக துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.
அதேபோல, கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வையும் பொதுமக்களிடத்தில் ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தற்பொழுது கோவை மாவட்டத்தில் covid-19 வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. கோவையைப் பொருத்தவரை தற்போது வரை 43 ஆயிரத்து எட்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 40 ஆயிரத்து 47 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், 2411 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை நாளொன்றுக்கு 5 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பண்டிகை காலம் என்பதால் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். மேலும் கடைகளில் கள ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் நோய்த்தொற்று இருந்தால் உடனடியாக தங்களை சிகிச்சைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 10 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. அதேபோல், தீபாவளி பண்டிகை காலங்களில் கூட்டம் அதிகமாக வரும் இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் கிருமி நாசினி மருந்துகளை தெளித்து தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், மாவட்டத்தில் இ சேவை மையம் மூலமாக வருமான வரி சான்றிதழ் ஜாதி சான்றிதழ் போன்றவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. உரிய காலத்தில் பயனாளர்களுக்கு கிடைக்க அவ்வப்போது ஆய்வுகளையும் விசாரணைகளையும் மேற்கொண்டு சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.