கோவை: மத்திய அரசுக்கு சொந்தமான பஞ்சாலைகளை திறக்க வலியுறுத்தி கோவையில் மில் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: மத்திய அரசுக்கு சொந்தமான பஞ்சாலைகளை திறக்க வலியுறுத்தி கோவையில் மில் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசுக்கு சொந்தமான 7 என்டிசி பஞ்சாலைகள் தமிழகத்தில் கோவை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்த ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டது. அதன்பின் சில தளர்வுகளின் அடிப்படையில் திறக்கப்பட்ட ஆலைகள் முழுமையாக செயல்படாமல் பகுதி நேரம் மட்டுமே இயங்கி வருகின்றன. மேலும் ஆலை நிர்வாக பொறுப்பில் உள்ளவர்களுக்கு முழு சம்பளமும், தொழிலாளர்களுக்கு பாதி சம்பளம் வழங்கப்பட்டது. இதனை கண்டித்து பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்றது.
மேலும், போராட்டத்தின் தீர்வாக தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட்டது.
இருப்பினும் ஆலைகள் பகுதி நேரம் மட்டுமே இயங்குவதால் இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் வேலையின்றி இருப்பதாகவும், உடனடியாக ஆலைகளை முழுமையாக திறக்க வேண்டும் எனவும் அனைவருக்கும் முழு சம்பளம் வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமநாதபுரம் பகுதியில் உள்ள பங்கஜா மில்ஸ் பஞ்சாலை முன்பு தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல, கோவையில் CSW மில், முருகன் மில், கம்போடியா மில் உள்ளிட்ட மில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் எச்.எம்.எஸ், எல்.பி.எஃப், ஏ.ஐ.டி.யூ.சி, உள்ளிட்ட தொழிற் சங்கங்களின் தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.