கோவை: பொள்ளாச்சியில் 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுவனுக்கு சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவமனை ஊழியர்கள் 2 மணி நேரமாக அலைக்கழித்ததாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
கோவை: பொள்ளாச்சியில் 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுவனுக்கு சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவமனை ஊழியர்கள் 2 மணி நேரமாக அலைக்கழித்ததாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள பெரியபோது கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கோகுல கிருஷ்ணன்(6). இந்நிலையில், விளையாடிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக ஐந்து ரூபாய் நாணயத்தை தவறுதலாக விழுங்கிய சிறுவன் வயிற்று வலி ஏற்பட்டதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, அவரது தந்தை அருகிலுள்ள பெரிய போது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு சிகிச்சை அளிக்காமல் மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.
பின்னர், உடனடியாக அந்த சிறுவனை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் சுமார் 2 மணி நேரம் வரை அலைக்கழித்து விட்டு அதன் பிறகு தண்ணீர் அருந்துங்கள் சரியாகிவிடும் என கூறி சிகிச்சை அளிக்காமல் அவர்களை திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து, அங்குள்ள சமூக ஆர்வலர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் அவர்களை தொடர்பு கொண்டு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை கூட அளிக்கவில்லை என தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, சார் ஆட்சியர் வைத்தியநாதன் மருத்துவமனை கண்காணிப்பாளரை தொடர்புகொண்டு சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டுமென உத்தரவிட்டதை அடுத்து சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை அலைக்கழிக்காமல் உடனடியாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.