கோவை: பருவமழை முன்கூட்டியே பெய்ததால் பட்டாம் பூச்சிகளின் இடப்பெயர்வும் முன்கூட்டியே நடந்து இருப்பதாக பட்டாம் பூச்சி ஆர்வலர்களும், ஆய்வாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
கோவை: பருவமழை முன்கூட்டியே பெய்ததால் பட்டாம் பூச்சிகளின் இடப்பெயர்வும் முன்கூட்டியே நடந்து இருப்பதாக பட்டாம் பூச்சி ஆர்வலர்களும், ஆய்வாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
வானவில்லில் இருக்கும் ஏழு வண்ணங்களில் மட்டும் இல்லாமல் பல வண்ணங்களை பரவசப்படுத்தி வானத்தில் பறந்தது கொண்டிருப்பவை தான் சின்னஞ்சிறு பட்டாம் பூச்சிகள். கண்களை சிமிட்டுவதற்குள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பறந்து பறந்து செல்கிறது.
மலைக்காடுகளிலும், அடர்ந்த வனங்களில் உள்ள அரிய வகை தாவரங்கள் பரவி வளர்வதற்கு முக்கியமானவை பட்டாம் பூச்சிகள். தொடர் கனமழை பட்டாம் பூச்சிகளின் வாழ்வியலை அழித்து விடும் என்பதால் தென்மேற்கு பருவமழைக்கு முன்னரே மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து லட்சக்கணக்கான பட்டாம் பூச்சிகள் வானை அலங்கரித்து படி கிழக்கு தொடர்ச்சி மலையை நோக்கி புறப்படுகிறது.
மேலும், அங்கு இனப்பெருக்கம் செய்து வடகிழக்கு பருவமழை காலத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி பறக்கிறது. இந்நிகழ்வானது காலம்காலமாக நடந்தாலும் 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் நடப்பாண்டில் பட்டாம் பூச்சிகளின் இடப்பெயர்வு முன்கூட்டியே நடந்து இருப்பதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கோவையில் உள்ள சிங்காநல்லூர் குளம், வெள்ளலூர் குளம், சூலூர் குளம், புட்டுவிக்கி போன்ற இடங்களில் 150க்கும் மேற்பட்ட பட்டாம் பூச்சிகள் கூட்டம் கூட்டமாக பறந்து செல்வதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள கால நிலை, உணவு, இனப்பெருக்கம் ஆகியவற்றிற்காக கொல்லிமலை, ஏற்காடு, பச்சமலை ஆகிய கிழக்கு தொடர்ச்சி மலைகளிலிருந்தும், பிற பகுதியில் இருந்து செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் வழக்கமாக இடப்பெயர்வு நிகழ்வு நடக்கும்.
சுமார் 150 கிலோமீட்டர் முதல் 250 கிலோமீட்டர் வரை பயணிக்கும் பட்டாம் பூச்சிகள் சூரிய ஒளி இருக்கிற நேரத்தில் பயணிக்கிறது. தரையில் இருந்து 3 மீட்டர் வரை பறக்கும் இவை இரவு நேரங்களில் ஓய்வு எடுத்த பின் பறக்க ஆரம்பிக்கிறது. அதன் பின் திரும்பி செல்லாது. அடுத்த காலம் வரை காத்திருக்கும். அதாவது ஏப்ரல் மே மாதங்களில் கிழக்கு தொடர்ச்சி மலையை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கும்.
இந்த நிலையில், நடபாண்டை பொறுத்தவரை முன்கூட்டியே இடப்பெயர்வு நடந்துள்ளதாக கோவை இயற்கை அமைப்பு மற்றும் பட்டாம் பூச்சி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அ.பாவேந்தன் அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

மேலும் பேசிய அவர், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக dark blue tiger (கரு நில வரியன்), blue tiger (நில வரியன்), common crow (வெண்புள்ளி கருப்பன்), double branded crow, lime butterfly (எலுமிச்சை அழகி), common emigrants (கொன்னை வெள்ளையன்), plain tiger (வெந்தய வரியன்), crimson rose (சிவப்பு உடல் அழகி), striped tiger (ஆரஞ்சு வரியன்) போன்ற பட்டாம் பூச்சிகள் அதிகளவில் தென்படுகிறது. மேலும் இவைகள் மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி பயணித்து கொண்டு இருக்கிறது. பொதுவாக செப்டம்பர் இறுதியில் தான் பட்டாம் பூச்சிகளின் இடப்பெயர்வு நடக்கும்.
ஆனால், நடப்பாண்டை பொறுத்தவரை ஆகஸ்ட் -செப்டம்பர் மாதங்களிலே நடந்துள்ளது. மேலும் வழக்கமாக செப்டம்பர் மாதத்தின் இறுதியில் நடக்கும் இடப்பெயர்வு நடப்பாண்டில் நடக்குமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவில் முன்கூட்டியே இடப்பெயர்வு நடைபெற்றது இல்லை. இதற்கு முக்கிய காரணம் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் பெய்துள்ள அதிக மழைப்பொழிவு என்று கூறப்படுகிறது.
பட்டாம் பூச்சிகள் எப்போதும் ஒரே திசையை நோக்கி பயணிப்பதில்லை. ஆனால், இடம்பெயரும் பட்டாம் பூச்சிகள் ஒரே நேர்கோட்டு திசையில் சீரான வேகத்தில் பயணிக்கும். TNBS சார்பாக இடம்பெயர்வு பட்டாம் பூச்சிகளை பற்றிய கணக்கீட்டுக்கு ஒரு அட்டவணை ஒன்றை வெளியிட்டு இருக்கிறோம்.
இதில் பொதுமக்கள், பறவை மற்றும் பட்டாம் பூச்சி ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு படிவத்தில் உள்ள பட்டாம் பூச்சிகளின் படங்களை உங்க ஏரியாவில் அதிக அளவில் பார்த்து இருந்தால் அதன் எண்ணிக்கை, நேரம், காலம், பறக்கும் திசை, வகை ஆகியவற்றை பூர்த்தி செய்து [email protected] என்ற மெயிலுக்கு அனுப்பலாம்.
இதன் மூலம் அதன் எண்ணிக்கை கணக்கீடு செய்து அறிக்கை தயாரிக்கப்படும். மேலும் தேசிய நெடுஞ்சாலைகளான மேட்டுப்பாளையம் -ஊட்டி சாலை, கோத்தகிரி சாலை போன்ற மலை பிரதேசங்களில் அதிகளவில் பட்டாம் பூச்சிகளின் இடப்பெயர்வு நடக்கலாம். எனவே, பட்டாம் பூச்சிகள் அதிகம் பறக்கும் இடங்களில் வாகன ஓட்டிகள் வேகத்தை கட்டுப்படுத்தி செல்லாம் என்று தெரிவித்தார்.