திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பொம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த ஜி.என்.பாலன்நகரை சேர்ந்தவர் ரவி (வயது 44). இவருடைய மனைவி கனகவள்ளி (35). இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகளும், 15 வயதில் மகனும் உள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பொம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த ஜி.என்.பாலன்நகரை சேர்ந்தவர் ரவி (வயது 44). இவருடைய மனைவி கனகவள்ளி (35). இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகளும், 15 வயதில் மகனும் உள்ளனர்.
திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகில் ரவி ஆட்டோ ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். கடந்த 3-ந்தேதி, கனகவள்ளி மற்றும் அவருடைய மகள் காணாமல் போய் விட்டதாக ரவி, அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதில் இருவரும் ஈரோடு பெரியார்நகரில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது, கனகவள்ளி ரவியுடன் செல்ல மறுத்ததுடன், அவருடைய தாய் வீட்டிற்கு செல்வதாக போலீசாரிடம் கூறிவிட்டு சென்று விட்டார். ஆனால், கனகவள்ளி மற்றும் அவருடைய மகள் மீண்டும் அதே மகளிர் விடுதிக்கு சென்றதாக, கூறப்படுகிறது.
இதையறிந்த, ரவி கடந்த 24-ந்தேதி காலை அங்கு சென்று தன்னுடன் வருமாறு, இருவரிடமும் கெஞ்சி உள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் ரவியுடன் வர மறுத்ததுடன், அவரை மிகவும் கேவலமாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக தெரிகிறது.
இதனால், ரவி கடுமையான மனஉளைச்சலுடன், அங்கிருந்து வீட்டிற்கு வந்து விட்டார். பின்னர் வீட்டில் தனியாக இருந்த ரவி விரக்தியில், வீட்டு கதவை உள்பக்கமாக பூட்டி தூக்கு மாட்டி உள்ளார்.
இந்த நிலையில், ரவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவருடைய செல்போனில் மரண வாக்குமூலமாக பேசி பதிவு செய்த வீடியோவை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார்.
அதனால், பதற்றத்துடன் அங்கு சென்ற உறவினர்கள், நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால், சந்தேகமடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது, ரவி உள்ளே தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து, அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ரவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவருடைய செல்போனில் மரண வாக்குமூலமாக பேசி பதிவு செய்த வீடியோ மற்றும் ரவியை அவருடைய மனைவி செல்போனில், தரக்குறைவாக பேசுவது போன்ற ஆடியோவும் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
"நான் உயிரோட இருந்து அவங்க கெட்டுப்போறத பார்க்கறத விட, அதுக்கு முன்னாடியே செத்து போயிடலாம்னு நான் முடிவு பண்ணிட்டேன். இது என்னோட மரண வாக்குமூலம். எனக்கு, இதுவரை உதவியா இருந்த அனுப்பர்பாளையம் போலீசாருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். எப்படியாவது எனது மனைவியையும், குழந்தையையும் அந்த 4 பேரிடம் இருந்து பிரித்து, இருவருக்கும் நல்ல புத்தி சொல்லி, திருப்பூருக்கு அழைத்து வந்து தாயிடம் ஒப்படைக்க வேண்டும்", என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாகவும், ரவி மரண வாக்குமூலம் என்று வெளியிட்ட வீடியோ மற்றும் அவருடைய சாவுக்கு காரணம் என்று கூறப்படும் ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த 4 பேர் ஆகியோர் குறித்தும் தீவிரமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.