கோவை: ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக, தி.மு.க கட்சியினர் பிரதமர் மோடி குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி மக்களை திசை திருப்ப பார்க்கின்றனர் என கோவையில், பா ஜ க, மாநில துணை தலைவர், வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை: ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக, தி.மு.க கட்சியினர் பிரதமர் மோடி குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி மக்களை திசை திருப்ப பார்க்கின்றனர் என கோவையில், பா ஜ க, மாநில துணை தலைவர், வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை புலியகுளம் பகுதியில், இ சேவை மையத்தை பா.ஜ.க மாநில துணை தலைவர், வானதி சீனிவாசன் இன்று துவக்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், கடந்த ஆறு ஆண்டுகளில் மத்திய அரசிடம் இருந்து ஐந்து லட்சம் கோடிக்கு மேலாக தமிழகம் பெற்று இருக்கின்றது, என தெரிவித்தார்.
கொரோனாவிர்க்கு மட்டும் 6600 கோடி தமிழகத்திற்கு, மத்திய அரசு வழங்கி உள்ளது, எனவும் தெரிவித்தார். எந்த வித பாகுபாடின்றி, தமிழகத்திற்கு, மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது, எனவும் தெரிவித்தார்.
தி.மு.க ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை சொல்லி திமுக தலைவர் ஸ்டாலின், மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். சிறுபான்மையினர் விழாக்களுக்கு மட்டும் தவறாமல் வாழ்த்து சொல்லும் திமுக தலைவர், ஸ்டாலின், ஏன் விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ணர் ஜெயந்தி போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதில்லை..? என கேள்வி எழுப்பினார்.
அப்படி பார்த்தால், ஏன் நடிகர் ரஜினிகாந்த் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, பதில் அளித்த வானதி சீனிவாசன், ரஜினியின் அரசியல் பயணமே ஆன்மீக பயணம்தான் எனவும் இதற்கு முன்பாக அவர் வாழ்த்துகளை சொல்லி இருக்கின்றார். பிற மதங்களை இழிவுபடுத்துவர் அல்ல ரஜினிகாந்த், என்று விளக்கமளித்தார்.
வரும் சட்டமன்ற தேர்தலில், திமுகவிற்கு எதிரான அலை இருக்கும். கூட்டணி என்பதை தாண்டி, பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே லட்சியம், எனவும் தெரிவித்தார்.
பிரேமலதா விஜயகாந்த் அவருடைய கட்சியின் நோக்கத்தை சொல்லி இருக்கலாம் என கூறிய அவர் தேசிய ஜனநாயக கூட்டணி உடனேயான கூட்டணி இப்போது வரை தொடர்ந்து வருகின்றது, எனவும், அதில் எந்த மாற்றமும் இல்லை, எனவும் தெரிவித்தார்.
தேர்தல் களம் நெருங்க, நெருங்க கூட்டணி செயல்பாடுகளில் கட்சிகள், அவர்கள் விருப்பங்களை தெரிவிப்பது வாடிக்கையான ஒன்று தான் என கூறிய அவர், பா.ஜ.க தலைமையில் தனியாக ஒரு அணி உருவாகுமா? என்பது தேர்தல் நெருங்கும் போது தான் அதற்கான பதில் கிடைக்கும், எனவும் தெரிவித்தார்.
எங்களுக்கும் ஆர்வம் இருக்கின்றது சூழல் மாறிக்கொண்டு இருப்பதை உணர்கின்றோம், என கூறிய அவர் செல்வாக்கு இல்லாத பகுதிகளில் இப்போது செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. தேர்தலுக்குள்ளாக, நல்ல மாற்றங்கள் ஏற்படலாம், எனவும் தெரிவித்தார்.
கழகங்கள் இல்லாத தமிழகம் என்பதை சொல்லி வருகின்றோம், அதை அடையும் வரை கூட்டணி இருக்கும், எனவும் பா.ஜ.க துணை தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.