கோவை: ஜெ.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் விவகாரத்தில் முறையான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி சமூக நீதிக் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: ஜெ.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் விவகாரத்தில் முறையான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி சமூக நீதிக் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவரான சரிதா தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை இருக்கையில் அமரக் கூடாது எனவும் ஊராட்சி மன்ற தலைவர் என்ற அறிவிப்பு பலகை வைக்கக் கூடாது என்றும் அதிமுகவை சேர்ந்த உசிலமணி (எ) பாலசுப்பிரமணியம் கூறியதாக ஊராட்சி மன்ற தலைவர் சரிதா தெரிவித்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களிலும் அரசியல் கட்சியினரும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக இன்று சமூக நீதிக் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அதில் கோவை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் பலரும் பல்வேறு தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். கொரோனா காலத்தில் 13க்கும் மேற்பட்டவர்கள் தீண்டாமை வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சரிதா அவர்களது விவகாரத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் தேர்தலில் வென்றாலும் தன்னுடைய கடமையை செய்யக் கூடாது என்று ஆதிக்க சாதி வெறியர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனவும் முதல் தகவல் அறிக்கை மட்டுமே பதிவு செய்யப்படுவதாகவும் அவர்கள் கைது செய்யப்படுவதில்லை என்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மீது மிரட்டல் போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
எனவே, கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட்டு மாவட்டத்தில் உள்ள ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு தகுந்த பாதுகாப்பும் பணி செய்யும் சூழலையும் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.