நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் சுத்திகரிப்பு நிலையம் இன்றி செயல்பட்டு வரும் கேரட் கழுவும் நிலையங்களுக்கு, அதிகாரிகள் சீல் வைப்பதை கண்டித்து, கேரட் கழுவும் இயந்திர உரிமையாளர்கள் இன்று மாலை 6 மணி முதல் கால வரையின்றி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் சுத்திகரிப்பு நிலையம் இன்றி செயல்பட்டு வரும் கேரட் கழுவும் நிலையங்களுக்கு, அதிகாரிகள் சீல் வைப்பதை கண்டித்து, கேரட் கழுவும் இயந்திர உரிமையாளர்கள் இன்று மாலை 6 மணி முதல் கால வரையின்றி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலைத்தோட்ட காய்கறிகளை சந்தைப்படுத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட விவசாயிகள் தேயிலைக்கு அடுத்தபடியாக, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனர். அவ்வாறு, தினந்தோறும் அறுவடை செய்யும் அவற்றை, மாவட்டத்தில் உள்ள 60 கேரட், பீட்ரூட் கழுவும் நிலையங்களுக்கு எடுத்து சென்று, சுத்தம் செய்து வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு 500 டன் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கேரட் கழுவ பயன்படுத்தப்படும் தண்ணீர் முறையாக சுத்திகரிக்காமல் வெளியேற்றப்படுவதாக, புகார் எழுந்தது. அதனையடுத்து, மாவட்டத்தில் உள்ள கேரட் கழுவும் நிலையங்களில் சுத்திகரிப்பு எந்திரங்களை அமைக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.
ஆனால், கொரோனா ஊரடங்கு மற்றும் கனமழை காரணமாக, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது, என அந்த சுத்திகரிப்பு நிலையங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத கேரட் கழுவும் நிலையங்களுக்கு அதிகாரிகள் சீல் வைக்க தொடங்கி உள்ளனர். இதனையடுத்து, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடுதல் அவகாசம் தர வேண்டும், சீல் வைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று முதல் கால வரையின்றி வேலை நிறுத்தம் துவங்கியது.
இவர்களது, வேலை நிறுத்தம் அறிவிப்பால் நீலகிரி மாவட்டத்திலிருந்து தினந்தோறும் சுத்தம் செய்து அனுப்பி வைக்கபடும் 500 டன் கேரட், பீட்ரூட் ஏற்றுமதி பாதிக்கப்படுவதோடு, இந்த தொழிலை நம்பியுள்ள சுமார் 50 ஆயிரம் பேர் நேரிடையாகவும், மறைமுகமாகவும் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.