கோவை: 2020ம் ஆண்டுக்கான இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் கோவை 40வது இடத்தைப் பிடித்துள்ளது.
கோவை: 2020ம் ஆண்டுக்கான இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் கோவை 40வது இடத்தைப் பிடித்துள்ளது.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், 2016ல், 'தூய்மை பாரதம்' இயக்ககம் துவக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் தூய்மை நகரங்கள் பட்டியல் மத்திய அரசு சார்பில் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி 2020ம் ஆண்டுக்கான இந்தியாவின் தூய்மை நகரங்கள் தொடர்பான பட்டியலை மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர் ஹர்தீப் நேற்று வெளியிட்டார்.
அதில் இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் பிடித்திருக்கிறது. தொடர்ந்து 4வது முறையாக இந்தூர் நகரம் நாட்டிலேயே மிகவும் தூய்மையான நகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2வது இடத்தை குஜராத் மாநிலம் சூரத் நகரமும், 3வது இடத்தை மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையும் பிடித்து இருக்கிறது.
இந்த பட்டியலில், கோவை நகரம் 40வது இடத்தை பிடித்துள்ளது. இதேபோல, மதுரை 42வது இடத்தையும் சென்னை 45வது இடத்தையும் பிடித்துள்ளது.
தூய்மை நகரங்கள் பட்டியலில் தமிழக அளவில் கோவை முதலிடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், இந்திய அளவில் 40வது இடம் பெற்றிருப்பது, வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது. ஏனெனில், கடந்த 2017ம் ஆண்டு கோவை 16வது இடத்தில் இருந்த நிலையில், கடந்தாண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் 24 இடங்கள் பின்தங்கி கோவை 40வது இடத்தை பெற்றிருந்தது.
இந்நிலையில், இந்த வருடமும் தூய்மை நகரங்கள் பட்டியலில் கோவை 40வது இடத்தில் இருப்பது, கடந்த ஓராண்டில் தூய்மை பணிகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இந்த தரவரிசை பட்டியல் நகர்ப்புற உள்ளாட்சிகள் மேற்கொள்ளும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள், மத்திய அரசின் பிரதிநிதிகளின் கள மதிப்பீடு மற்றும் மக்களின் கருத்துக்களின் அடிப்படையிலே உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Links:
எழில்மிகு கோவையை உருவாக்கி நாட்டிலேயே முதன்மையான மாநகராட்சியாக உருவாக்க வேண்டும் : கோவை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்